கோவிஷீல்டு தடுப்பூசியின் ஆயுட்காலம் தொடர்பாக சீரம் நிறுவன பரிந்துரையை உலக சுகாதார நிறுவனம் நிராகரித்தது


கோவிஷீல்டு தடுப்பூசியின் ஆயுட்காலம் தொடர்பாக சீரம் நிறுவன பரிந்துரையை உலக சுகாதார நிறுவனம் நிராகரித்தது
x
தினத்தந்தி 9 April 2021 12:22 AM IST (Updated: 9 April 2021 12:22 AM IST)
t-max-icont-min-icon

கோவிஷீல்டு தடுப்பூசியின் ஆயுட்காலம் தொடர்பாக சீரம் நிறுவன பரிந்துரையை உலக சுகாதார நிறுவனம் நிராகரித்தது.

புதுடெல்லி,

ஆக்ஸ்போர்டு மற்றும் அஸ்ட்ராஜெனேகா நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசியை இந்தியாவின் சீரம் நிறுவனம் கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்து வருகிறது. இந்த தடுப்பூசியை சேமித்து வைக்கும் கால அளவை (அலமாரி ஆயுட்காலம்) 6 மாதத்தில் இருந்து 9 மாதமாக நீட்டிக்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் (டி.சி.ஜி.ஐ.) பரிந்துரைத்தது.

இதை ஏற்றுக்கொண்ட டி.சி.ஜி.ஐ., சீரம் நிறுவனத்தின் இந்த பரிந்துரைக்கு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. இதனால் இந்த தடுப்பூசியின் அலமாரி ஆயுட்காலத்தை உற்பத்தி நாளில் இருந்து 9 மாதங்களாக நீட்டித்தது. இதன் மூலம் தடுப்பூசி டோஸ்கள் வீணாவது குறைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து இந்த ஆயுட்கால நீட்டிப்புக்கு அனுமதி கேட்டு உலக சுகாதார நிறுவனத்துக்கு சீரம் நிறுவனம் பரிந்துரைத்தது. ஆனால் இந்த பரிந்துரையை உலக சுகாதார நிறுவனம் நிராகரித்து உள்ளது. மேலும் இது தொடர்பாக விவாதிக்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்புடன் கூட்டம் ஒன்றுக்கும் உலக சுகாதார நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியால் ஐரோப்பிய நாடுகளில் பக்கவிளைவு குறித்த அச்சம் நிலவி வரும் நிலையில், உலக சுகாதார அமைப்பின் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Next Story