இரு முறை அட்டார்னி ஜெனரல் சோலி சொராப்ஜி மரணம் - தலைவர்கள் இரங்கல்


இரு முறை அட்டார்னி ஜெனரல் சோலி சொராப்ஜி மரணம் - தலைவர்கள் இரங்கல்
x
தினத்தந்தி 1 May 2021 3:34 AM IST (Updated: 1 May 2021 3:34 AM IST)
t-max-icont-min-icon

இரு முறை அட்டார்னி ஜெனரல் பதவி வகித்த சோலி சொராப்ஜி கொரோனா தாக்குதலால் மரணம் அடைந்தார்.

புதுடெல்லி,

நாட்டின் சிறந்த சட்டநிபுணர்களில் ஒருவராக விளங்கியவர் சோலி சொராப்ஜி (வயது 91).

நாட்டை உலுக்கி வருகிற கொரோனா தாக்குதலுக்கு சோலி சொராப்ஜியும் ஆளானார். இதையடுத்து அவர் தலைநகர் டெல்லியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அவர் மரணம் அடைந்தார்.

ஒரு பார்சி குடும்பத்தில் 1930-ம் ஆண்டு பிறந்தவர் சோலி சொராப்ஜி. 1953-ம் ஆண்டு தனது 23 வயதில் வக்கீலாக பதிவு செய்தார். 1971-ல் மும்பை ஐகோர்ட்டில் மூத்த வக்கீல் அந்தஸ்து பெற்றார்.

வி.பி. சிங், வாஜ்பாய் ஆகியோர் பிரதமர் பதவி வகித்தபோது முறையே 1989-90, 1998-2004 என இரு கால கட்டங்களில் இந்தியாவின் அட்டார்னி ஜெனரல் (மத்திய அரசின் தலைமை வக்கீல்) பதவி வகித்தார். நாட்டின் இரண்டாவது உயரிய சிவிலியன் விருதான பத்மவிபூஷண் பெற்றுள்ளார்.

இவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி தனது இரங்கல் செய்தியில், “சோலி சொராப்ஜி சிறந்த வக்கீலாகவும், அறிவுஜீவியாகவும் திகழ்ந்தவர் ஆவார். சட்டத்தின் வாயிலாக அவர் ஏழைகளுக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் உதவுவதில் முன்னணியில் இருந்தார். இந்தியாவின் அட்டார்னி ஜெனரலாக இருந்து குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்ததற்காக அவர் நினைவுகூரப்படுவார். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், அபிமானிகளுக்கும் இரங்கல்கள்” என கூறி உள்ளார்.

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணாவும் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அவர் தனது இரங்கல் செய்தியில், “முன்னாள் அட்டார்னி ஜெனரல் சோலி சொராப்ஜியின் மறைவுச்செய்தி அறிந்து நான் மிகவும் வருத்தம் அடைந்துள்ளேன். நீதித்துறை உலகில் 68 ஆண்டுகால தொடர்பில் அவர் அளவிட முடியாத பங்களிப்பை வழங்கி உள்ளார்” என குறிப்பிட்டுள்ளார்.

Next Story