நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 2.98 லட்சம் பேர் குணம் அடைந்தனர்
இந்தியாவில் கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து ஒரே நாளில் 2.98 லட்சம் பேர் மீண்டு இருக்கிறார்கள்.
புதுடெல்லி,
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. நேற்றும் தொடர்ந்து 9-வது நாளாக தினசரி பாதிப்பு 3 லட்சத்தை கடந்தது. 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 86 ஆயிரத்து 452 பேர் தொற்று பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இது ஒரு நாளின் உலகளாவிய கொரோனா தொற்றின் புதிய உச்சம் ஆகும்.நேற்று முன்தினம் ஒரே நாளில் 19 லட்சத்து 20 ஆயிரத்து 107 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில் தான் பாதிப்பு எகிறி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை நாட்டில் 1 கோடியே 87 லட்சத்து 62 ஆயிரத்து 976 பேர் கொரோனாவின் கோரப்பிடிக்கு ஆளாகி உள்ளனர்.
நேற்று புதிதாக பாதிப்புக்குள்ளானவர்களில் 73.05 சதவீதத்தினர் மராட்டியம், உத்தரபிரதேசம், டெல்லி, கர்நாடகம், கேரளா, சத்தீஷ்கார், மேற்கு வங்காளம், தமிழகம், ஆந்திரா, ராஜஸ்தான் ஆகிய 10 மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.மராட்டியத்தில் புதிதாக 66 ஆயிரத்து 159 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உள்ளனர். கேரளாவில் 38 ஆயிரத்து 607 பேரும், உத்தரபிரதேசத்தில் 35 ஆயிரத்து 104 பேரும் தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரு நாளில், பல்வேறு ஆஸ்பத்திரிகளில் பெற்ற சிகிச்சையின் பலனாக 2 லட்சத்து 97 ஆயிரத்து 540 பேர் கொரோனா நோய்த்தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.
இது மீட்பில் இந்தியா புதிய உச்சம் தொட்டிருப்பதை காட்டுகிறது. நாட்டில் இதுவரை 1 கோடியே 53 லட்சத்து 84 ஆயிரத்து 418 பேர் கொரோனா நோய்த்தொற்றில் இருந்து மீட்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்தியாவில் கொரோனா மீட்பு விகிதம் 81.99 சதவீதம் ஆகும்.
கொரோனாவால் ஏற்படுகிற உயிர்ப்பலி நேற்று முன்தினத்துடன் ஒப்பிடுகையில் நேற்று குறைந்துள்ளது. நேற்றுமுன்தினம் 3,645 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். நேற்று இந்த எண்ணிக்கை சற்றே குறைந்து 3,498 ஆக பதிவாகி இருக்கிறது. நேற்றுமுன்தினத்தைவிட நேற்று சுமார் 150 பேர் இறப்பு குறைந்துள்ளது. இது ஆறுதல் அளிக்கிற அம்சம் ஆகும்.
நேற்று உயிரிழந்த 3,498 பேரில் 771 பேர் மராட்டிய மாநிலத்தினர் ஆவார்கள். மற்ற மாநிலங்களைப் பொறுத்தமட்டில் டெல்லியில் 395 பேர், உத்தரபிரதேசத்தில் 295 பேர், கர்நாடகத்தில் 270 பேர், சத்தீஷ்காரில் 251 பேர், குஜராத்தில் 180 பேர், ராஜஸ்தானில் 158 பேர், ஜார்கண்டில் 145 பேர், பஞ்சாப்பில் 137 பேர் இறந்துள்ளனர்.
பலி விகிதம் 1.11 சதவீதமாக தொடர்கிறது.
இந்தியாவில் இதுவரையில் 2 லட்சத்து 8 ஆயிரத்து 330 பேர் கொரோனாவால் மரணத்தை தழுவி உள்ளனர். இந்த உயிர்ப்பலியில் மராட்டியம் முதல் இடத்தில் நீடிக்கிறது. அங்கு இதுவரையில் 67 ஆயிரத்து 985 பேர் பலியாகி உள்ளனர். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொரோனாவுக்கு இரையாக கொடுத்த ஒரே மாநிலம் இதுதான்.
நேற்றுமுன்தினம் ஒரே நாளில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 105 பேர் புதிதாக சிகிச்சையில் சேர்ந்தனர். நேற்று இந்த எண்ணிக்கை 85 ஆயிரத்து 414 ஆக குறைந்தது.
நேற்று காலை 8 மணி நிலவரப்படி நாட்டின் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் கொரோனா மீட்பு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 31 லட்சத்து 70 ஆயிரத்து 228 ஆகும். இது மொத்த பாதிப்பில் 16.90 சதவீதம் ஆகும்.
சிகிச்சை பெறுவோரில் 78.18 சதவீதத்தினர் 11 மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாநிலங்களின் பட்டியலில் மராட்டியம், கர்நாடகம், உத்தரபிரதேசம், கேரளா, ராஜஸ்தான், குஜராத், சத்தீஷ்கார், ஆந்திரா, மேற்கு வங்காளம், பீகார் ஆகிய மாநிலங்களுடன் தமிழகமும் இடம் பெற்றிருக்கிறது.
Related Tags :
Next Story