மக்களுடன் தொடர்பிலேயே இருக்க வேண்டும் கொரோனா சூழல் தொடர்பான கருத்துகளை மக்களிடம் கேட்டறியுங்கள் - மத்திய மந்திரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்
மக்களுடன் தொடர்பிலேயே இருக்குமாறும், கொரோனா சூழல் குறித்து அவர்களிடம் கருத்துகளை கேட்டறியுமாறும் மத்திய மந்திரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது. தினமும் உருவாகி வரும் லட்சக்கணக்கான நோயாளிகளும், ஆயிரக்கணக்கான மரணங்களும் நாட்டின் சுகாதாரத்துறைக்கு பெரும் சவாலாக மாறியிருக்கின்றன.
இந்த கொடூர சூழலில் இருந்து நாட்டை பாதுகாப்பதற்கு மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளன. இதைப்போல இந்த தொற்றில் இருந்து மக்களை மீட்பதில் பிரதமர் மோடியும் தனிக்கவனம் செலுத்தி வருகிறார்.
இதற்காக மாநில முதல்-மந்திரிகள், சுகாதார வல்லுனர்கள், முப்படை தளபதிகள், தடுப்பூசி-ஆக்சிஜன் தயாரிப்பாளர்கள் என பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களுடன் பலமுறை உயர்மட்ட ஆலோசனைகளை நடத்தி கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கி விட்டு வருகிறார்.
அந்தவரிசையில் நேற்று மத்திய மந்திரிகளுடன் மெய்நிகர் முறையில் ஆலோசனை நடத்தினார். நாட்டில் 2-வது அலை பரவத்தொடங்கியபின், தனது மந்திரிசபை சகாக்களுடன் பிரதமர் மோடி நடத்திய முதலாவது கூட்டம் இதுவாகும்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நடப்பு சூழல் தொடர்பாக மத்திய மந்திரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார். குறிப்பாக ஒவ்வொரு மந்திரியும் தங்களுக்கான பிராந்தியங்களில் வசிக்கும் மக்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்குமாறும், தற்போதைய சூழல் தொடர்பாக மக்களின் கருத்துகளை கேட்டறிந்து, அவர்களுக்கு உதவுமாறும் அறிவுறுத்தினார்.
மேலும் உள்ளூர் மட்டத்திலான பிரச்சினைகள் உடனடியாக அடையாளம் காணப்பட்டு தீர்வு காணப்படுவதை உறுதி செய்யுமாறும் மந்திரிகளை பிரதமர் வலியுறுத்தினார்.
முன்னதாக கொரோனாவின் 2-வது அலையால் நாடு சந்தித்து வரும் பிரச்சினைகள் கூறித்து இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
குறிப்பாக ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள், ஆக்சிஜன் வசதிகளை அதிகரிப்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் ஆக்சிஜன்-அத்தியாவசிய மருந்து பொருட்கள் தட்டுப்பாட்டை போக்குவதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கப்பட்டது.
கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் 2 தடுப்பூசிகளை நாடு தயாரித்து வருவதையும், இன்னும் பல தடுப்பூசிகள் பல்வேறு கட்ட சோதனைகளில் இருப்பதையும் சுட்டிக்காட்டியதுடன், இதுவரை 15 கோடி தடுப்பூசி டோஸ்கள் போட்டிருப்பதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த தொற்று ‘நூற்றாண்டில் ஒருமுறை’ என்ற அளவிலான நெருக்கடியை ஏற்படுத்தி இருப்பதாகவும், உலகம் முழுவதையும் மிகப்பெரிய சவாலுக்கு தள்ளியிருப்பதாகவும் கூட்டத்தில் குறிப்பிடப்பட்டது.
எனவே தற்போதைய சூழலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச உணவு தானியங்கள், ஜன்தன் கணக்குகள் மூலமாக நிதியுதவி வழங்குதல் போன்றவை குறித்தும் விவாதிக்கப்பட்டது.
முககவசம், சமூக இடைவெளி, கைகளை கழுவுதல் போன்ற கொரோனா பொருத்தமான நடவடிக்கைகளை மத்திய மந்திரிகள் முன்னிலைப்படுத்தியதுடன், நாட்டின் முன்னிருக்கும் மிகப்பெரிய சவாலை முறியடிப்பதற்கு சமூகத்தின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் தெரிவித்தனர். எனினும் இந்த சூழலை நாடு வெற்றிகரமாக முறியடித்து வெற்றி பெறும் எனவும் மந்திரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
இந்த கூட்டத்தில் மத்திய மந்திரிகளுடன், நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பாலும் பங்கேற்றார். அவர் கொரோனா மேலாண்மை தொடர்பான குறிப்பு ஒன்றை சமர்ப்பித்தார்.
மேலும் நாட்டில் கொரோனாவை சமாளிப்பதற்காக கையிருப்பில் உள்ள ஆக்சிஜன் மற்றும் மருந்துகள் குறித்து மந்திரிகள் முறையே பியூஸ் கோயல், மான்சுக் மாண்டவியா ஆகிய மந்திரிகள் எடுத்துரைத்தனர்.
இந்த தகவல்கள் அனைத்தும் மத்திய அரசு பின்னர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story