40 வயது கொரோனா நோயாளியை காப்பாற்ற ஆஸ்பத்திரியில் படுக்கையை விட்டு கொடுத்து உயிரை விட்ட முதியவர் - உயிர் தியாகத்துக்கு பாராட்டு குவிகிறது


40 வயது கொரோனா நோயாளியை காப்பாற்ற ஆஸ்பத்திரியில் படுக்கையை விட்டு கொடுத்து உயிரை விட்ட முதியவர் - உயிர் தியாகத்துக்கு பாராட்டு குவிகிறது
x
தினத்தந்தி 1 May 2021 1:03 AM GMT (Updated: 1 May 2021 1:03 AM GMT)

40 வயது கொரோனா நோயாளிக்காக ஆஸ்பத்திரியில் தான் சிகிச்சை பெற்று வந்த படுக்கையை விட்டுக்கொடுத்து முதியவர் ஒருவர் தனது உயிரை விட்டு உள்ளார்.

நாக்பூர்,

மராட்டியத்தில் கொரோனா பேரலை காரணமாக ஏராளமான பாதிப்புகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளுக்கு படுக்கை கிடைப்பது பெரும் திண்டாட்டமாக மாறி உள்ளது.

இந்தநிலையில் மாநிலத்தின் 2-வது தலைநகராக கருதப்படும் நாக்பூரை சேர்ந்த நாராயண் பாவ்ராவ்(வயது 85) என்பவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அவர் கடந்த 16-ந் தேதி அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றார். நீண்ட போராட்டத்துக்கு பிறகு அவருக்கு படுக்கை ஒதுக்கப்பட்டது.

அப்போது நடுத்தர வயதுள்ள ஒரு பெண் கொரோனா பாதித்த தனது 40 வயது கணவருக்கு படுக்கை ஒதுக்க கோரி ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் இருகரம் கூப்பி கண்ணீர் விட்டு அழுதார்.

இதை பார்த்து கண்கலங்கிய முதியவர் நாராயண், தனது படுக்கையை அந்த நபருக்கு அளிக்கும்படியும், தான் வீட்டிலேயே சிகிச்சை பெற்று கொள்வதாகவும் கூறியுள்ளார். இதை ஏற்றுக்கொள்ள டாக்டர்கள் தயங்கினர்.

அப்போது நாராயண் பாவ்ராவ் கூறும்போது, ‘நான் 85 வயதை கடந்துவிட்டேன். நல்லது, கெட்டதுகளை பார்த்துவிட்டேன். இந்த படுக்கை என்னைவிட இப்பெண்ணின் கணவருக்கு அதிக அவசியமாக உள்ளது. அவர் இறந்து போனால், அவரது குழந்தைகள் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்படுவார்கள். எனவே, இந்த நபரின் வாழ்க்கையை காப்பது எனது கடமை. எனது படுக்கையை அவருக்கு ஒதுக்கி விடுங்கள்’ என தெரிவித்தார்.

வேறு வழியின்றி நாராயண் பாவ்ராவின் வேண்டுகோளை எழுத்து மூலமாக டாக்டர்கள் பெற்றுக்கொண்டு அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல்நிலை மேலும் மோசமாகி அடுத்த 3 நாட்களில் அவர் உயிரிழந்தார்.

பிறருக்காக உயிரையே தியாகம் செய்த முதியவர் நாராயண் பாவ்ராவ் குறித்து சமூகவலை தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இவர் ஆர்.எஸ்.எஸ். தொண்டராக பணியாற்றியவர் என்பது தெரியவந்தது. அவரது உயிர் தியாகத்தை பாராட்டி வணங்குவதாக, பா.ஜனதா ஆளும் மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் புகழாரம் சூட்டியுள்ளார்.

Next Story