டெல்லியில் தீராத சோகம் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஆஸ்பத்திரியில் 12 பேர் பலி


டெல்லியில் தீராத சோகம் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஆஸ்பத்திரியில் 12 பேர் பலி
x
தினத்தந்தி 2 May 2021 12:00 AM IST (Updated: 1 May 2021 11:47 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் டாக்டர் உள்பட 12 பேர் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதுடெல்லி,

கொரோனாவின் கோரத்தாக்குதலுக்கு இலக்காகி உள்ள டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை பெரும் பிரச்சினையாக விசுவரூபம் எடுத்துள்ளது. அங்கு ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஆஸ்பத்திரிகளில் உயிரிழப்புகள் நேர்வதும் தீராத சோகமாக உருவெடுத்துள்ளது.

அந்த வகையில் டெல்லி துக்ளகாபாத் பகுதியில் அமைந்துள்ள பத்ரா ஆஸ்பத்திரியில் நேற்று 12 நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

அவர்களில் ஒருவர் டாக்டர் ஆர்.கே.ஹிம்தானி. இவர் அந்த ஆஸ்பத்திரியின் இரைப்பை குடலியல் துறைத்தலைவர் ஆவார். கடந்த 15 நாட்களுக்கு மேலாக அவர் அங்கு சிகிச்சை பெற்று வந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

இங்கு முதலில் 8 பேர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்ததாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் பின்னர் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்து விட்டது.

கடந்த 8 நாட்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்தோர் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று காலையில் 2,500 லிட்டர் ஆக்சிஜன் மட்டுமே இருந்தபோது ஆஸ்பத்திரி நிர்வாகம், அதிகாரிகளிடம் பற்றாக்குறை பற்றி தெரிவித்து விட்டதாகவும், 12.30 மணிக்கு கையிருப்பும் கரைந்து விட்டதாகவும், 1.35 மணிக்குத்தான் டேங்கர் வந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

12 பேர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்த துயர சம்பவத்துக்கு முதல்-மந்திரி கெஜ்ரிவால் டுவிட்டரில் வேதனை தெரிவித்துள்ளார்.

Next Story