குஜராத் ஆஸ்பத்திரியில் கோர தீ விபத்து - 18 கொரோனா நோயாளிகள் கருகிச்சாவு
குஜராத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் ஏற்பட்ட கோரத்தீ விபத்தில் 18 கொரோனா நோயாளிகள் கருகி பலியாகினர்.
ஆமதாபாத்,
குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் இருந்து 190 கி.மீ. தொலைவில் பாரூச் நகரில், பாரூச்-ஜம்புசார் நெடுஞ்சாலையில் ஒரு அறக்கட்டளை அமைப்பின் ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது.
4 மாடிகளை கொண்ட இந்த ஆஸ்பத்திரி, கொரோனா சிறப்பு ஆஸ்பத்திரியாக இயங்கி வருகிறது. மற்ற நோயாளிகள் சுமார் 50 பேரும் தங்கி சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த நிலையில், அந்த ஆஸ்பத்திரியின் கொரோனா வார்டில் நேற்று அதிகாலை 1 மணியளவில் நோயாளிகள் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வார்டில் திடீரென தீப்பிடித்து மளமளவென பரவத்தொடங்கியது. தீயின் வெம்மை தாங்காமல், தூங்கிக்கொண்டிருந்த கொரோனா நோயாளிகள் எழுந்து பார்த்து, தீ கொளுந்து விட்டு எரிவதை கண்டு அலறினர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினரும், உள்ளூர் மக்களும் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
ஒரு மணி நேரம் போராடி தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர்.
இந்த கோரத்தீ விபத்தில் 18 கொரோனா நோயாளிகள் பலியாகினர். அவர்களில் பலர் உயிரோடு எரிந்தும், கரும்புகையால் மூச்சு திணறியும் பலியாகினர். பலரது உடல்கள் கரிக்கட்டைகள்போல ஆகி விட்டன. அவை அடையாளம் காண முடியாத அளவுக்கு இருந்தன.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “காலை 6.30 மணிக்கு கிடைத்த தகவல்படி இந்த கோரத்தீ விபத்தில் 18 பேர் பலியாகி இருப்பது தெரிய வந்துள்ளது”என்றார்.
இந்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.
இந்த விபத்துக்கு பின்னர் 50 நோயாளிகள் அங்கிருந்து தீயணைப்பு படையினராலும், உள்ளூர் மக்களாலும் மீட்கப்பட்டு, அருகில் உள்ள பிற ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர்.
காலைப்பொழுது விடிந்ததும் இந்தத் தீ விபத்து பற்றிய தகவல் அந்த நகரம் முழுவதும் காட்டு தீயாகப் பரவியது. அங்கு சேர்க்கப்பட்டிருந்த நோயாளிகளின் குடும்பத்தினரும், உறவினர்களும் அலறியடித்துக்கொண்டு அங்கு குவிந்தனர். அந்தக் காட்சி நெஞ்சை நொறுக்குவதாக அமைந்தது.
நோயாளிகள் படுக்கைகளிலும், ஸ்ட்ரெச்சர்களிலும் உயிருடன் எரிந்து கரிக்கட்டைகளாகி இருந்தது காண்போரை உலுக்கியது.
இந்த துயர சம்பவம் நிகழ்ந்ததற்கு ஆஸ்பத்திரி நிர்வாகம்தான் காரணம் என பலரும் குற்றம் சாட்டினர்.
இந்த தீ விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
இதையொட்டி டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவில், “பாரூச்சில் உள்ள ஆஸ்பத்திரியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோருக்காக வேதனை அடைந்தேன். துயரம் அடைந்த குடும்பங்களுக்கு எனது இரங்கல்கள்” என கூறி உள்ளார்.
Related Tags :
Next Story