கொரோனாவை சமாளிக்க தேசிய கொள்கை தேவை ஏழை குடும்பங்களுக்கு தலா ரூ.6 ஆயிரம் - மத்திய அரசுக்கு சோனியா காந்தி கோரிக்கை


கொரோனாவை சமாளிக்க தேசிய கொள்கை தேவை ஏழை குடும்பங்களுக்கு தலா ரூ.6 ஆயிரம் - மத்திய அரசுக்கு சோனியா காந்தி கோரிக்கை
x
தினத்தந்தி 2 May 2021 2:09 AM IST (Updated: 2 May 2021 2:09 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவின் கோர எழுச்சியை சமாளிக்க தேசிய கொள்கையை ஏற்படுத்துங்கள், ஏழை குடும்பங்களுக்கு தலா ரூ.6 ஆயிரம் வழங்குங்கள் என்று மத்திய அரசுக்கு சோனியா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

புதுடெல்லி,

உலகளவில் கொரோனா பாதிப்பில் முதல் இடத்தில் உள்ள அமெரிக்காவை பின்னுக்குத்தள்ளும் விதத்தில் இந்தியாவில் இந்த கோர வைரஸ் தன் உக்கிரத்தை காட்டி வருகிறது.

நேற்று முதன் முதலாக தினசரி பாதிப்பு 4 லட்சத்தை கடந்து, புதிய எழுச்சி கண்டிருப்பது உலகையே அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

இந்த தருணத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா காந்தி மத்திய அரசுக்கு கோரிக்கைகள் விடுத்து நேற்று ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார்.

அந்த பதிவில் அவர் கூறி இருப்பதாவது:-

மத்திய, மாநில அரசுகள் விழித்தெழுந்து, தங்கள் கடமைகளை நிறைவேற்ற வேண்டிய தருணம் இது.

நாட்டில் கொரோனா வைரஸ் எழுச்சியை சமாளிப்பதற்கு தேசிய அளவில் ஒரு கொள்கையை உருவாக்குமாறு மத்திய அரசை நான் கேட்டுக்கொள்கிறேன். அதன்மீது அரசியல் கருத்தொற்றுமையையும் ஏற்படுத்த வேண்டும்.

நடப்பு கொரோனா நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு உதவும் வகையில் ஒவ்வொரு ஏழை குடும்பத்தின் வங்கி கணக்கிலும் ரூ.6 ஆயிரத்தை டெபாசிட் செய்யுங்கள்.கொரோனா பரிசோதனைகளை பெருக்குங்கள். உயிர்காக்கும் அத்தியாவசிய மருந்துப்பொருட்கள் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதை தடுத்து நிறுத்துங்கள்.

அனைத்து மக்களுக்கும் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி இலவசமாக போடப்பட வேண்டும். நாட்டின் தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும். இதற்காக தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க கட்டாய உரிமம் என்னும் நிலையை ஏற்படுத்த வேண்டும். கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிரான போரில் மத்திய அரசுடன் காங்கிரஸ் கட்சி இணைந்து நிற்கும். இந்த சோதனையான தருணத்தில் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.

இவ்வாறு சோனியா காந்தி அந்த வீடியோ பதிவில் கூறி இருக்கிறார்.

Next Story