கொரோனா பரவலுக்கு காரணம்: சென்னை ஐகோர்ட்டு கருத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் கமிஷன் முறையீடு


கொரோனா பரவலுக்கு காரணம்: சென்னை ஐகோர்ட்டு கருத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் கமிஷன் முறையீடு
x
தினத்தந்தி 2 May 2021 2:17 AM IST (Updated: 2 May 2021 2:17 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா இரண்டாவது அலை பரவலுக்கு தேர்தல் கமிஷனே காரணம் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்த கருத்துகளுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் கமிஷன் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது.

புதுடெல்லி,

கரூர் தொகுதி வாக்கு எண்ணிக்கையின் போது கொரோனா தடுப்பு விதிகள் முழுமையாக பின்பற்றும் வகையில் தேவையான ஏற்பாடுகளை செய்யக்கோரி தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும், அ.தி.மு.க வேட்பாளருமான விஜயபாஸ்கர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு விசாரித்தது.

அப்போது நீதிபதிகள், ‘கொரோனா தடுப்பு விதிகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யாமல், சமூக இடைவெளியின்றி அரசியல் கட்சிகளை இஷ்டம் போல் பிரசாரம் செய்ய அனுமதித்ததே தொற்று பரவலுக்கான காரணம். இதற்காக தேர்தல் கமிஷன் மீது கொலை வழக்கு சுமத்தினாலும் தவறில்லை’ என கடும் கண்டனம் தெரிவித்தனர்.

அத்துடன் வாக்கு எண்ணிக்கை நாளில் உரிய கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொள்ளவில்லை என்றால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்திவைக்க நேரிடும் எனவும் நீதிபதிகள் எச்சரித்தனர். பின்னர், கரூர் தொகுதி வாக்கு எண்ணிக்கை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணிக்கையின் போது கொரோனா சூழலை கருத்தில் கொண்டு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என தேர்தல் கமிஷன் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்று வழக்கை ஐகோர்ட்டு முடித்து வைத்தது.

இந்த நிலையில் கொரோனா பரவல் தொடர்பாக தேர்தல் கமிஷனுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டு தெரிவித்த கருத்துகளுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் கமிஷன் சார்பில் நேற்று மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு நாளை மறுநாள் விசாரிக்கிறது.

Next Story