அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் - சற்கர நாற்காலியின்றி நடந்து வந்து மம்தா பானர்ஜி பேச்சு


அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் - சற்கர நாற்காலியின்றி நடந்து வந்து மம்தா பானர்ஜி பேச்சு
x
தினத்தந்தி 2 May 2021 5:57 PM IST (Updated: 2 May 2021 5:57 PM IST)
t-max-icont-min-icon

மேற்குவங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அதிக தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

கொல்கத்தா,

மேற்குவங்காளத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 292 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக கூட்டணி, இடதுசாரி - காங்கிரஸ் கூட்டணிகள் தேர்தலை சந்தித்தன.

திரிணாமுல் காங்கிரசுக்கும் பாஜக-வுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவு என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது.

தற்போதைய நிலவரப்படி 217 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. பாஜக 74 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இடதுசாரிகள் கூட்டணி எந்த தொகுதியிலும் முன்னிலையில் இல்லை. 

217 தொகுதிகளில் முன்னிலையில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் மேற்குவங்காளத்தில் தொடர்ந்து 3 முறையாக ஆட்சியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலையில் உள்ள நிலையில் அக்கட்சி தலைவரும், மேற்குவங்காள முதல்மந்திரி மம்தா பானர்ஜி தற்போது தனது வீட்டின் முன் கூடியிருந்த ஆதரவாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய மம்தா பானர்ஜி, நான் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தொண்டர்கள் வெற்றிக்கொண்டாட்டங்களில் ஈடுபடவேண்டாம். அனைவரும் அவரவர் வீடுகளுக்கு செல்ல வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன். நான் 6 மணிக்கு மேல் செய்தியாளர்களை சந்திப்பேன்’ என்றார். 

கடந்த மார்ச் மாதம் தேர்தல் பிரசாரத்தின் போது மம்தா பானர்ஜி காலில் காயம் ஏற்பட்டது. மர்மநபர்கள் சிலர் தன்னை காரில் இருந்து தள்ளிவிட முயற்சித்தபோது இந்த காயம் ஏற்பட்டதாக மம்தா கூறினார். அதன்பின்னர் காலில் கட்டு போடப்பட்டு சற்கர நாற்காலியில் அமர்ந்தபடி மம்தா பானர்ஜி பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், வாக்குஎண்ணிக்கையில் பல தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. ஆட்சியை திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் கைப்பற்ற உள்ளது. தற்போது அவர் தனது வீட்டிற்கு வெளியே கூடியிருந்த ஆதரவாளர்களுடன் பேச வந்தபோது அவர் சற்கர நாற்காலி இல்லாமல் நடந்து வந்தார். இதன் மூலம் அவரது காலில் ஏற்பட்ட காயம் குணமாகிவிட்டது என்பது தெரியவந்துள்ளது.

Next Story