கேரளாவில் வார இறுதி நாள் முழு ஊரடங்கு - பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர்


கேரளாவில் வார இறுதி நாள் முழு ஊரடங்கு - பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர்
x
தினத்தந்தி 2 May 2021 4:07 PM GMT (Updated: 2 May 2021 4:07 PM GMT)

கேரளாவில் வார இறுதிநாள் சனிக்கிழமை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் நேற்று பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர்.

திருவனந்தபுரம்,

கேரளாவில் நாளுக்கு நாள் தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில், அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக வார இறுதி நாட்களில் (சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை) மாநிலம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய முழு முடக்கத்தை அமல்படுத்தி உள்ளது.

அந்தவகையில் நேற்று தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி, அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், கூட்டுறவு அமைப்புகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டு இருந்தது. தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்தோர் வீட்டில் இருந்தபடியே வேலை செய்தனர். அத்தியாவசிய பணிக்கு செல்வோர் மட்டும் தகுந்த அடையாள அட்டை மற்றும் ஆவணங்களை காட்டி சென்று வந்தனர். அத்தியாவசிய சேவைகளான மருத்துவம், மருந்தகம், பால், பத்திரிகை வினியோகத்திற்கு தடை இல்லாததால் வழக்கம் போல் அந்த பணிகள் தங்கு தடையின்றி நடந்தது.

அதேபோல் மளிகை கடைகள், காய்கறி, பழங்கள், மீன், இறைச்சி கடைகள் இரவு 7.30 மணி வரை செயல்பட்டன. மற்ற வணிக நிறுவனங்கள் உட்பட அனைத்து கடைகளும் திறக்கவில்லை.

ஓட்டல்களில் பார்சல் மூலமாக உணவு வழங்கப்பட்டது. கடற்கரை, சுற்றுலா தலங்கள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. வங்கி சேவை முடங்கி போனது. அதே சமயத்தில் அரசு, தனியார் பஸ்கள், வழக்கம் போல் இயக்கப்பட்டன.

ஆனால் பயணிகள் மிக குறைவாக இருந்ததை காண முடிந்தது. இதனால் 50 சதவீதத்திற்கும் குறைவான பஸ்களே இயக்கப்பட்டன. அதே போல் சரக்கு வாகனங்கள், அத்தியாவசிய தேவைகளுக்கு வாடகை கார்கள், ஆட்டோக்கள் இயங்கின. நோயாளிகள், தடுப்பூசி போட செல்வோர் ஆகியோர் அடையாள அட்டை காண்பித்துவிட்டு வெளியே சென்று வந்தனர். தேவையின்றி வாகனங்களில் வலம் வருவோர் மீது போலீசார் கடும் நடவடிக்கை மேற்கொண்டனர். முழு ஊரடங்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

இந்த நிலையில் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைக்கான கட்டணத்தை கேரள அரசு அதிரடியாக ரூ.500 ஆக குறைத்ததால், தனியார் பரிசோதனை மையங்கள் நேற்று முதல் பரிசோதனையினை நிறுத்தி வைத்துள்ளனர். அரசு தரப்பில் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கட்டணத்தை பழையபடி உயர்த்தினால் மட்டுமே சோதனையை தொடர முடிவு செய்து இருப்பதாக மருத்துவ பரிசோதனை ஆய்வு மைய சங்கம் அறிவித்து உள்ளது. இதை தொடர்ந்து கேரளாவில் கொ ரோனா பரிசோதனை முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

Next Story