புதுச்சேரி சட்டசபை தேர்தலில் வெற்றி; மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி


புதுச்சேரி சட்டசபை தேர்தலில் வெற்றி; மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி
x
தினத்தந்தி 2 May 2021 8:22 PM GMT (Updated: 2 May 2021 8:22 PM GMT)

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியை வெற்றி பெற செய்த மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து கொண்டார்.

புதுச்சேரி,

30 இடங்களை கொண்ட புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 6ந்தேதி நடந்தது.  இதில் 81.70 சதவீத வாக்குகள் பதிவாகின.  இதனையடுத்து இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

இதில், தொடக்கத்தில் இருந்தே அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் அதிக தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது.  இரவு 10 மணி நிலவரப்படி, அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதனுடன் கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க. 3 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது.  3ல் முன்னிலை பெற்றுள்ளது.

புதுச்சேரியில் மற்றொரு கூட்டணியான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள தி.மு.க. 3 இடங்களில் வெற்றியும், 3 இடங்களில் முன்னிலையும் பெற்றுள்ளது.  காங்கிரஸ் 2 இடங்களை கைப்பற்றி உள்ளது.

இதனால், போதிய இடங்களை கைப்பற்றியுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க கூடிய சூழல் ஏற்பட்டு உள்ளது.  இதுபற்றி பிரதமர் மோடி வெளியிட்டு உள்ள செய்தியில், தேசிய ஜனநாயக கூட்டணியை ஆசீர்வதித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.  அவர்களுக்கு சேவையாற்றும் பணியை தாழ்மையுடன் ஏற்று கொள்கிறோம்.  புதுச்சேரி மக்களின் கனவுகளை நனவாக்குவோம்.

பா.ஜ.க. தொண்டர்கள் தேர்தலில் சிறந்த முறையில் பணியாற்றி உள்ளனர்.  நல்லாட்சிக்கான நம்முடைய திட்ட செயல்முறைகளை மக்களிடம் விரிவாக கொண்டு சென்று சேர்த்துள்ளனர் என கூறியுள்ளார்.




Next Story