இன்னும் சில மாதங்களில் 11 கோடி தடுப்பூசியை வழங்குவோம்; கொரோனா தடுப்பூசி உற்பத்தியை ஒரே இரவில் அதிகரிக்க முடியாது; சீரம் நிறுவன நிர்வாகி சொல்கிறார்


இன்னும் சில மாதங்களில் 11 கோடி தடுப்பூசியை வழங்குவோம்; கொரோனா தடுப்பூசி உற்பத்தியை ஒரே இரவில் அதிகரிக்க முடியாது; சீரம் நிறுவன நிர்வாகி சொல்கிறார்
x
தினத்தந்தி 3 May 2021 5:46 PM GMT (Updated: 3 May 2021 5:46 PM GMT)

கொரோனா தடுப்பூசி உற்பத்தியை ஒரே இரவில் பெருக்க முடியாது. அடுத்த சில மாதங்களில் 11 கோடி தடுப்பூசிகளை வினியோகிப்போம் என்று சீரம் நிறுவன நிர்வாகி தெரிவித்துள்ளார்.

பெருக்க முடியாது
இந்தியாவில், கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இவற்றில், கோவிஷீல்டு தடுப்பூசியை மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது.கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுவது குறித்து சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் தலைமை செயல் நிர்வாகி அடார் பூனவல்லா நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

முதலில் சில விஷயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன். கொரோனா தடுப்பூசி உற்பத்தி என்பது நிபுணத்துவம் வாய்ந்த பணி. ஒரே இரவில் உற்பத்தியை பெருக்க இயலாது.

எளிதான காரியமல்ல
இந்தியாவின் மக்கள்தொகை மிகப்பெரியது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி உற்பத்தி செய்வது எளிதான காரியம் அல்ல. மிகவும் முன்னேறிய நாடுகளும், கம்பெனிகளும் கூட குறைந்த அளவு மக்கள்தொகையை வைத்துக்கொண்டே திணறி வருகின்றன.தடுப்பூசி மிக விரைவில் கிடைக்க வேண்டும் என்று எல்லோரும் விரும்புவது எங்களுக்கு புரிகிறது. நாங்களும் அதற்காகவே எல்லா முயற்சியும் எடுத்து வருகிறோம். கொரோனாவுக்கு எதிரான போரை வலுப்படுத்த கடுமையாக பாடுபட்டு வருகிறோம்.

மத்திய அரசு பணம் கொடுத்தது
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்தே மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். மத்திய அரசின் ஆதரவு எல்லா விதத்திலும் இருக்கிறது. இன்றைய தேதிவரை, 26 கோடி தவணை தடுப்பூசிகளுக்கான ஆர்டரை மத்திய அரசு அளித்துள்ளது. அதில், 15 கோடி தவணை தடுப்பூசிகளை வழங்கி விட்டோம்.மீதி 11 கோடி தவணை தடுப்பூசிகளுக்கான ரூ.1,732 கோடியே 50 லட்சத்தை மத்திய அரசு ஏற்கனவே வழங்கி விட்டது. அடுத்த சில மாதங்களில் இந்த தடுப்பூசிகளை மாநிலங்களுக்கும், தனியார் ஆஸ்பத்திரிகளுக்கும் வினியோகிப்போம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story