ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 24 பேர் சாவு: சாம்ராஜ்நகர் சம்பவம் குறித்து விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமனம் கர்நாடக அரசு உத்தரவு


ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 24 பேர் சாவு: சாம்ராஜ்நகர் சம்பவம் குறித்து விசாரிக்க  ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமனம் கர்நாடக அரசு உத்தரவு
x
தினத்தந்தி 4 May 2021 2:00 AM IST (Updated: 4 May 2021 2:00 AM IST)
t-max-icont-min-icon

சாம்ராஜ்நகரில் கொரோனா நோயாளிகள் 24 பேர் இறந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு:
சாம்ராஜ்நகரில் கொரோனா நோயாளிகள் 24 பேர் இறந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆக்சிஜன் தட்டுப்பாடு
சாம்ராஜ்நகரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகள் 24 பேர் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் இறந்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது. இறந்தவர்களின் குடும்பத்தினர் அந்த ஆஸ்பத்திரி நிர்வாகத்திற்கு எதிராக ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் கர்நாடகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு ஒரு புறம், ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்று கூறி வரும் நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் 24 கொரோனா நோயாளிகள் இறந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகமே நேரடி பொறுப்பு ஏற்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. 
ஐ.ஏ.எஸ். அதிகாரி
இந்த நிலையில் சாம்ராஜ்நகர் சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து வருவாய்த்துறை முதன்மை செயலாளர் மஞ்சுநாத் பிரசாத் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது:-
சாம்ராஜ்நகரில் நேற்று காலை 7 மணி வரை முடிந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோயாளிகள் 24 பேர் இறந்துள்ளனர். இது அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. இந்த சம்பவத்தை அரசு தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. இந்த 24 பேர்களின் சாவுக்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவயோகி கலசத் நியமிக்கப்படுகிறார். அவர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி 3 நாட்களில் விசாரணை அறிக்கையை வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


Next Story