ஊரடங்கு கட்டுப்பாடுகள் 10-ந்தேதி வரை நீட்டிப்பு; புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவிப்பு
புதுவையில் தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் வருகிற 10-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
பரிசோதனை மையம்
புதுவை எல்லைப்பிள்ளைசாவடியில் உள்ள மகளிர் மற்றும் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கவர்னரின் ஆலோசகர்கள் சந்திரமவுலி, ஏ.பி.மகேஸ்வரி, சுகாதாரத்துறை செயலாளர் அருண், இயக்குனர் மோகன்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதைத்தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
நடமாட்டம் அதிகரிப்புமகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் புறநோயாளிகளாக வரும் கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று உள்ளதா? என்பதை கண்டறிய புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்படுவதாக புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் அவர்களுக்கு இங்கேயே கொரோனா பரிசோதனை செய்ய இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.
அறிகுறி இருப்பவர்கள் கண்டிப்பாக கொரோனா தொற்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவர்களால் மற்றவர்களுக்கும் தொற்று பாதிப்பு ஏற்படும்.
புதுவையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த முயற்சி எடுத்து வருகிறோம். தேவையில்லாமல் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது. தற்போது மக்கள் நடமாட்டம் வெளியில் அதிகரித்துள்ளது.
10-ந்தேதிவரை நீட்டிப்புமக்களுக்கு உதவிடத்தான் அத்தியாவசிய கடைகளை திறந்துவைத்துள்ளோம். இருந்தபோதிலும் நாள்தோறும் கடைகளுக்கு செல்லக்கூடாது. மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தால் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டியதிருக்கும்.
எனவே மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை தவறாக பயன்படுத்தக்கூடாது. தொற்று பரவலை தடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அனைத்தும் வருகிற 10-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் தற்போதுள்ள நடைமுறைபோல், அத்தியாவசிய தேவைக்கான கடைகள் தவிர மற்ற கடைகளை திறக்கக்கூடாது.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க புதிய வெண்டிலேட்டர்கள், ஆம்புலன்ஸ்கள் வாங்க ஆர்டர் கொடுத்துள்ளோம்.
இவ்வாறு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.