கர்நாடகத்தில் தொடரும் சம்பவம்: ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மேலும் 12 கொரோனா நோயாளிகள் பலி


கர்நாடகத்தில் தொடரும் சம்பவம்: ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மேலும் 12 கொரோனா நோயாளிகள் பலி
x
தினத்தந்தி 4 May 2021 6:01 PM GMT (Updated: 4 May 2021 6:01 PM GMT)

கர்நாடகத்தில் தொடரும் சம்பவமாக ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மேலும் 12 கொரோனா நோயாளிகள் இறந்தனர்.

பெங்களூரு:
கர்நாடகத்தில் தொடரும் சம்பவமாக ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மேலும் 12 கொரோனா நோயாளிகள் இறந்தனர். 
ஆக்சிஜன் தட்டுப்பாடு 
கர்நாடகத்தில் கொரோனா தனது 2-வது அலையை வீச தொடங்கி உள்ளது. இந்த அலையில் சிக்கி ஏராளமானோர் தங்களது உயிரை பறிகொடுத்து வருகிறார்கள். குறிப்பாக கர்நாடகத்தில் உள்ள ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் வென்டிலேட்டர், ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. 
கடந்த சில தினங்களுக்கு முன்பு கோலார் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 8 கொரோனா நோயாளிகள் இறந்த நிலையில், சாம்ராஜ்நகர் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் 24 கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிர் இழந்த சம்பவம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் 12 பேர் சாவு 
இந்த நிலையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் வட கர்நாடகத்தில் மேலும் 12 கொரோனா நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. 
அதுபற்றிய விவரம் வருமாறு:-
கலபுரகி மாவட்டம் அப்சல்புரா டவுனில் தாலுகா அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு 16 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 70 வயதுக்கு மேற்பட்ட கொரோனா நோயாளிகள் 4 பேருக்கு மூச்சுத்திணறல் அதிகரித்தது. இதனால் அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 
இந்த சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் போது ஆக்சிஜன் தட்டுப்பாடு உண்டானது. இதனால் சிகிச்சை கிடைக்காமல் 4 கொரோனா நோயாளிகளும் அடுத்தடுத்து தங்களது உயிரை விட்டனர். இதுபற்றி அறிந்த சுகாதாரத்துறையினர் அங்கு சென்று 4 பேரின் உடல்களையும் எடுத்து சென்று அடக்கம் செய்தனர். 
உடல்கள் அடக்கம்
இதுபோல பெலகாவி டவுனில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 3 பேர் இறந்தனர். இதுபோல சித்ரதுர்கா அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற சித்ரதுர்காவை சேர்ந்த ஓம்காரப்பா(வயது 50), சிவக்குமார்(38), துமகூரு மாவட்டம் சிக்கநாயக்கனஹள்ளியை சேர்ந்த தனுஷா(50), இரியூரை சேர்ந்த சிவகுமார்(38), சித்தேஷ்(38) ஆகிய 5 பேரும் இறந்தனர். இவர்களின் உடல்களையும் சுகாதாரத்துறையினர் எடுத்து சென்று மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி அடக்கம் செய்தனர். 
நேற்று முன்தினம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 24 பேர் இறந்த நிலையில், மேலும் 12 பேர் இறந்து இருப்பது கர்நாடகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Next Story