மாற்று திறனாளிகளின் வசதிக்காக வாகனங்களுக்கு சென்று தடுப்பூசி போடும் திட்டம்; மும்பையில் தொடக்கம்
மாற்று திறனாளிகளின் வசதிக்காக அவர்களின் வாகனங்களுக்கு சென்று தடுப்பூசி போடும் திட்டம் மும்பையில் தொடங்கப்பட்டுள்ளது.
வாகனங்களில் தடுப்பூசி
ஆட்கொல்லி கொரோனா வைரஸ் உலகையே புரட்டிப்போட்டு உள்ளது. இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. ஆரம்பத்தில் முன்கள பணியாளர்களுக்கும், பின்னர் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. கடந்த 1-ந் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது. இதில் பொதுமக்கள் ஆர்வமாக தடுப்பூசி போட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் மும்பையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் வசதிக்காக அவர்களின் வாகனங்களுக்கு சென்று தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
வரிசையில் நிற்க வேண்டாம்முதல்கட்டமாக இந்த திட்டம் தாதர் கோஹினூர் டவரில் உள்ள பொது வாகன நிறுத்தத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி ஜி-வடக்கு வார்டு அதிகரி கூறுகையில், ‘‘வாகனங்களுக்கு சென்று தடுப்பூசி போடும் திட்டம் மாநகராட்சி ஜி-வடக்கு வார்டில் அமைக்கப்பட்டுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்காக இது தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி அவர்கள் தடுப்பூசிக்காக வரிசையில் நிற்க வேண்டி தேவை இருக்காது.
வாகன நிறுத்தத்தில் வந்து அவர்களது கார் உள்ளிட்ட வாகனங்களில் இருந்தால் போதும். பயனாளிகளின் வாகனத்திற்கு சென்று சுகாதாரப்பணியாளர்கள் தடுப்பூசி போடுவார்கள்’’ என்றார்.