மேற்குவங்காளம்: காவல்துறை டிஜிபி மற்றும் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி மாற்றம் - மம்தா அதிரடி


மேற்குவங்காளம்: காவல்துறை டிஜிபி மற்றும் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி மாற்றம் - மம்தா அதிரடி
x
தினத்தந்தி 5 May 2021 3:44 PM IST (Updated: 5 May 2021 3:44 PM IST)
t-max-icont-min-icon

மேற்குவங்காள காவல்துறை டிஜிபி மற்றும் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வின் கடும் சவாலை எதிர்கொண்டு, மொத்தமுள்ள 292 தொகுதிகளில் 213 தொகுதிகளில் வெற்றி பெற்று வலுவாக ஆட்சிக்கட்டிலில் அமர்கிறது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி. 

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களால் கட்சியின் சட்டசபை தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மம்தா, தொடர்ந்து 3-வது முறையாக முதல்-மந்திரியாக இன்று காலை பதவியேற்றுக் கொண்டார். 

கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜிக்கு ஆளுநர் ஜெகதீப் தங்கர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 
 
இந்நிலையில், பதவியேற்ற உடன் மேற்குவங்காள காவல்துறை டிஜிபி மற்றும் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அதிகாரிகளை மம்தா பானர்ஜி அதிரடியாக இடமாற்றம் செய்துள்ளார். முன்னதாக, அம்மாநிலத்தின் டிஜிபி-யாக நிரஞ்சயன் பாண்டேவும், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக ஜக் மோகனும் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டிருந்தனர். தேர்தல் விதிமுறைகள் அமலில் இருந்தபோது தேர்தல் ஆணையத்தால் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

ஆனால், தற்போது மேற்குவங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியமைந்துள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறை டிஜிபி மற்றும் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அதிகாரிகளை முதல்மந்திரி மம்தா பானர்ஜி இடமாற்றம் செய்துள்ளார்.

அதன்படி, மாநிலத்தின் புதிய டிஜிபி-யாக விரேந்திரா ஐபிஎஸ் அதிகாரியும், புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக ஜாவித் ஷாமினும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே பதவியில் இருந்த நிரஞ்சயன் பாண்டே தீயணைப்பு மற்றும அரசர பிரிவுக்கும், ஜக் மோகன் சிவில் பாதுகாப்பு பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேற்குவங்காளத்தில் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் பாஜக கட்சியை சார்ந்தவர்களை குறிவைத்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்துவதாகவும், இதில் பலர் கொல்லப்பட்டதாகவும் பாஜக தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், பதவியேற்பு விழாவின் போது மேற்குவங்காளத்தில் சட்டம் ஒழுங்கை மம்தா பானர்ஜி பாதுகாக்க வேண்டும் என்று கவர்னர் ஜக்தீப் தங்கார் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story