கொரோனா 2வது அலை: இந்தியாவில் 61% மக்கள் கவலையாகவும் கோபமாகவும் உள்ளனர்- கருத்து கணிப்பு
கொரோனா 2வது அலை இந்தியாவில் 61 சதவீத மக்கள் கவலையாகவும் கோபமாகவும் உள்ளனர் என கருத்து கணிப்பு ஒன்றில் தெரியவந்து உள்ளது.
புதுடெல்லி:
நாடு முழுதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3.82 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகை உள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 06 லட்சத்து 65 ஆயிரத்தை கடந்தது. 34.87 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 2,26,188 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று மற்றும் அதனைக் கட்டுப்படுத்த எடுக்கப்படும் நிலைமை குறித்து பெரும்பாலான இந்தியர்கள் பெரும் கவலை, சோகம் மற்றும் கடும் கோபத்தில் உள்ளனர். ஜன்சத்தா என்ற பத்திரிக்கை அளித்த தகவல் அடிப்படையில் தெரிய வந்துள்ளது.
ஆக்ஸிஜன் மற்றும் அத்தியாவசிய மருந்துகள் இல்லாததால் நாட்டின் சுகாதார அமைப்பு தோல்வி அடைந்துள்ளது. தற்போது நாடு முன்பு இல்லாத வகையில் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. தொற்றுநோய் பரவி வரும், இந்த நேரத்தில் மக்களின் மனநிலை என்ன என்பதை அறிய உள்ளூர் வட்டாரங்களால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், இந்த கொரோனா சூழ்நிலையை சமாளிக்க மத்திய அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்து மக்களின் அணுகுமுறை என்ன என்பதை அறிந்து கொள்வதே கணக்கெடுப்பின் முக்கியக் குறிக்கோளாக இருந்தது.
மருத்துவமனைகளில் மருந்துகள் மற்றும் ஆக்ஸிஜன் படுக்கைகள் இல்லாதது மக்கள் மீது கடுமையான உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த இரண்டு மாத கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலைகளில் சிக்கி மிகவும் பாதிக்கப்பட்டு உள்ள மக்களின் மனநிலையைப் பற்றி கேட்டபோது, அதற்கு பதிலளித்தவர்களில் சுமார் 23 சதவீதம் பேர் "மிகவும் கவலை"யாக இருப்பதாகக் கூறினர். எட்டு சதவீதம் பேர் தாங்கள் "மனச்சோர்வடைந்து உள்ளதாகவும்" கூறியுள்ளனர்.
சுமார் 20 சதவீதம் பேர் தாங்கள் "வருத்தமாகவும் கோபமாகவும்" இருப்பதாகவும், 10 சதவீதம் பேர் "கடும் கோபமாக" இருப்பதாகவும், ஏழு சதவீதம் பேர் மட்டுமே "அமைதியாக" இருப்பதாகவும் கூறினர். சுமார் 28 சதவீதம் பேர் "நம்பிக்கை தான் எல்லாம்" என்று கூறியுள்ளனர்.
கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, நாடு முழுவதும் 61 சதவீத இந்தியர்கள் கொரோனா தொற்று நோய் காரணமாக கோபமாக, வருத்தமாக உள்ளனர். இந்த கணக்கெடுப்பில் 8,141 பேர் பங்கேற்றனர்.
கணக்கெடுப்பில் கேட்கப்பட்ட இரண்டாவது கேள்வி, நிலைமையைக் கையாள இந்திய அரசு சரியான பாதையில் செல்கிறதா என்று நினைக்கிறார்களா? எனக் கேட்டபோது, சுமார் 41 சதவீதம் பேர் "ஆம்" என்றும், 45 சதவீத குடிமக்கள் "இல்லை" என்றும் சொன்னார்கள். 14 சதவீதம் பேருக்கு எதுவும் தெரியாது எனவும் கூறினார்கள். இந்த கேள்விக்கு மொத்தம் 8,367 பேர் பதிலளித்தனர்.
Related Tags :
Next Story