உத்தரகாண்ட் ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் வினியோக பாதிப்பால் 5 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு
உத்தரகாண்ட் ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் வினியோக பாதிப்பால் 5 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.
டேராடூன்,
கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்குவதில் நாடு முழுவதும் ஆங்காங்கே பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. பற்றாக்குறை, தொழில் நுட்பக்கோளாறு, தடங்கல்கள் என பல்வேறு காரணங்களால், ஆக்சிஜன் வினியோகம் அடிக்கடி பாதிக்கப்படுகிறது. இதனால் ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் கொத்துக்கொத்தாக மரணித்து வருகின்றனர்.
அந்தவகையில் உத்தரகாண்டின் ஹரித்வார் மாவட்டத்துக்கு உட்பட்ட ரூர்க்கியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் நேற்று முன்தினம் அதிகாலை 1.30 மணி முதல் 2 மணி வரை ஆக்சிஜன் வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் ஒரு பெண் உள்பட 5 நோயாளிகள் அடுத்தடுத்து மரணமடைந்தனர். இதில் ஒருவர் வென்டிலேட்டர் உதவியுடனும், 4 பேர் ஆக்சிஜன் படுக்கையிலும் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த சம்பவம் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் ரவிசங்கர் கூறினார். மேலும் மருத்துவக்குழு ஒன்று அந்த ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story