புதுச்சேரியில் துணை முதல்-அமைச்சர் பதவி ஏற்படுத்தப்படுமா? என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பதில்


புதுச்சேரியில் துணை முதல்-அமைச்சர் பதவி ஏற்படுத்தப்படுமா? என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பதில்
x
தினத்தந்தி 6 May 2021 10:26 AM IST (Updated: 6 May 2021 10:26 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் துணை முதல்-அமைச்சர் பதவி ஏற்படுத்தப்படுமா? என்ற கேள்விக்கு என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பதில் அளித்துள்ளார்.

அப்பாபைத்தியசாமி கோவிலில் தரிசனம்
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து புதுச்சேரி முதல்-அமைச்சராக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பதவி ஏற்க உள்ளார்.இந்த நிலையில் சேலத்தில் உள்ள அப்பாபைத்தியசாமி கோவிலில் நேற்று ரங்கசாமி சிறப்பு வழிபாடு நடத்தினார். முன்னதாக கோவிலுக்கு வந்த அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது,பின்னர் ரங்கசாமி அப்பாபைத்தியசாமி கோவிலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழையும், அமைச்சர் பட்டியலையும் வைத்து சிறப்பு பூஜை செய்து மலர் தூவி சாமி தரிசனம் செய்தார். அவருடன் 3 எம்.எல்.ஏ.க்கள் வந்திருந்தனர். தொடர்ந்து அவர் கோவிலில் மதிய உணவு சாப்பிட்டார்.

பேட்டி
இதைத்தொடர்ந்து ரங்கசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி: புதுவையில் முதல்-அமைச்சராக பதவி ஏற்பு விழா எப்போது?

பதில்: 7-ந் தேதி (நாளை) பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது.

கேள்வி: பா.ஜனதா கட்சி சார்பில் 3 அமைச்சர் பதவி கேட்பதாக கூறப்படுகிறதே?

பதில்: அது மாதிரி எதுவும் இ்ல்லை.

ஆதரவு

கேள்வி: பதவி ஏற்க உள்ள உங்கள் அமைச்சரவையில் பா.ஜனதா கட்சி இடம்பிடிக்குமா?

பதில்: அவர்கள் இல்லாமல் எப்படி ஆட்சி அமைக்க முடியும்?. இது தேசிய ஜனநாயக கூட்டணி அல்லவா?

கேள்வி: துணை நிலை கவர்னர் உங்களுக்கு ஒத்துழைப்பு தருவாரா?

பதில்: புதுச்சேரியின் வளர்ச்சிக்கு துணை நிலை கவர்னர் முழு ஒத்துழைப்பு தருவார். தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய அரசுக்கு சிறந்தமுறையில் ஆதரவு நிச்சயம் அளிப்பார்.

துணை முதல்-அமைச்சர்

கேள்வி: துணை முதல்-அமைச்சர் பதவி ஏற்படுத்தப்படுமா?

பதில்: புதுவையில் இதுவரை அப்படி இல்லை. மத்திய அரசு கூறினால் பரிசீலிப்போம். தமிழக முதல்-அமைச்சராக பதவி ஏற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

கேள்வி: புதுச்சேரியில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதே?

பதில்: கொரோனா பரவலை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நாங்கள் பொறுப்பேற்றதும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து ரங்கசாமி புதுச்சேரிக்கு புறப்பட்டு சென்றார்.

Next Story