முன்னாள் மத்திய மந்திரி அஜித் சிங் மறைவு; பிரதமர், குடியரசு தலைவர் இரங்கல்


முன்னாள் மத்திய மந்திரி அஜித் சிங் மறைவு; பிரதமர், குடியரசு தலைவர் இரங்கல்
x
தினத்தந்தி 6 May 2021 10:59 AM IST (Updated: 6 May 2021 10:59 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரசால் மரணம் அடைந்த முன்னாள் மத்திய மந்திரி அஜித் சிங் மறைவுக்கு பிரதமர் மற்றும் குடியரசு தலைவர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

புதுடெல்லி,

ராஷ்டீரிய லோக் தள கட்சியின் தலைவராக இருந்தவர் அஜித் சிங் (வயது 86).  முன்னாள் விமான போக்குவரத்து துறை மந்திரியாகவும் இருந்த அவர் பாக்பத் தொகுதியில் 7 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமை கொண்டவர்.  கடந்த 1986ம் ஆண்டு முதன்முறையாக நாடாளுமன்ற மேலவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.

இவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் 20ந்தேதி கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.  இதற்காக அவர் குர்காவன் நகர மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.  இந்நிலையில், கடந்த செவ்வாய் கிழமை இரவில் அவரது நிலைமை மோசமடைந்து உள்ளது.

இதனை தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.  இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து உள்ளார்.  அவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.  அவர் வெளியிட்டுள்ள செய்தியில், விவசாயிகள் நலன்களுக்காக தன்னை அர்ப்பணித்து கொண்டவர்.  மத்தியில் பல்வேறு துறைகளின் பொறுப்புகளை திறமையுடன் பகிர்ந்து அளித்தவர் என புகழாரம் சூட்டியுள்ளார்.

இதேபோன்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், முன்னாள் மத்திய மந்திரி மற்றும் ராஷ்டீரிய லோக் தள கட்சியின் தலைவரான சவுத்ரி அஜித் சிங் மறைவு செய்தியறிந்து வருத்தமடைந்தேன் என தெரிவித்து உள்ளார்.


Next Story