ராஜஸ்தான் மாநிலத்தில் மே 10 முதல் முழு ஊரடங்கு அமல்


ராஜஸ்தான் மாநிலத்தில் மே 10 முதல் முழு ஊரடங்கு அமல்
x
தினத்தந்தி 6 May 2021 11:57 PM IST (Updated: 6 May 2021 11:57 PM IST)
t-max-icont-min-icon

ராஜஸ்தானில் மே 10 முதல் மே 24 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெய்ப்பூர்,

நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாட்டு விதிகளை அமல்படுத்து வருகின்றன. கொரோனா பரவல் அதிகம் ஏற்பட்டுள்ள மாவட்டங்களில் ஊரடங்கு விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று ராஜ்ஸ்தான் மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 17,532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 161 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக்வும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அங்கு கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ராஜஸ்தான் மாநில அரசு சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மாநிலம் முழுவதும் வரும் மே 10 ஆம் தேதி காலை 5 மணி முதல் மே 24 ஆம் தேதி காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், இந்த ஊரடங்கின் போது அத்தியாவசிய தேவைகள் மற்றும் அவசர உதவிகள் தவிர பிற வர்த்தகம், போக்குவரத்து உள்ளிட்ட சேவைகள் எதுவும் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story