இந்திய கிரிக்கெட் வீராங்கனை
வேதா கிருஷ்ணமூர்த்தியின் சகோதரியும் கொரோனாவுக்கு பலி
சிக்கமகளூரு:
இந்திய கிரிக்கெட் வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தியின் தாய் கொரோனாவுக்கு பலியான நிலையில் அவரது சகோதரியும் கொரோனாவுக்கு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கிரிக்கெட் வீராங்கனை
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தி. இவரது சொந்த ஊர் கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ள கடூர் ஆகும். இவருடைய தந்தை கிருஷ்ணமூர்த்தி, தாய் செலுவாம்பா. வேதா கிருஷ்ணமூர்த்திக்கு வத்சலா (வயது 35) என்ற அக்காளும், ஒரு தம்பியும் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வேதா கிருஷ்ணமூர்த்தியின் தாய் செலுவாம்பா, கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் வேதா கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் துயரத்தில் மூழ்கினர்.
சகோதரி பலி
இந்த துயரம் மறைவதற்குள் வேதா கிருஷ்ணமூர்த்தியின் அக்காள் வத்சலா, கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிக்கமகளூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு வத்சலா உயிரிழந்தார்.
பின்னர் அவரது உடல் பீரூர்-கடூர் சாலையில் உள்ள வேதா கிருஷ்ணமூர்த்திக்கு சொந்தமான தோட்டத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு பாதுகாப்பான முறையில் வத்சலாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொரோனாவுக்கு தாய் இறந்த நிலையில் தற்போது அக்காளும் இறந்திருப்பது வேதா கிருஷ்ணமூர்த்தியை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தி உள்ளது.
Related Tags :
Next Story