கேரளாவில் நாளை முதல் முழு ஊரடங்கு அமல்
கேரளாவில் நாளை முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது என்று தலைமை செயலாளர் ஜாய் தெரிவித்து உள்ளார்.
திருவனந்தபுரம்,
இது தொடர்பாக கேரள தலைமை செயலாளர் ஜாய் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கேரளாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. கடந்த 4 நாட்களில் மாநிலம் முழுவதும் 5 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தியதில் சராசரியாக 25 சதவீதம் பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 41 ஆயிரத்து 953 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது பரிசோதனை செய்யப்பட்ட கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் 27 சதவீதம் ஆகும்.
மத்திய சுகாதாரத்துறையின் கொரோனா கட்டுப்பாடு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளின்படி கொரோனா பாதிப்பு 15 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தால் முழு ஊரடங்கை அமல்படுத்த பரிந்துரை செய்து உள்ளது.
அதன்படி கேரள அரசு இரவு நேர ஊரடங்கை கடந்த ஏப்ரல் 21-ந் தேதி முதல் அமல் படுத்தியது. ஆனாலும் கொரோனா தொற்று எந்த வகையிலும் குறைய வில்லை. இந்த நிலையில் கேரள மருத்துவ அதிகாரிகள் சங்கம், இந்திய மருத்துவ சங்கம் மற்றும் நிபுணர்கள் கேரளாவில் முழு ஊரடங்கை உடனடியாக அமல்படுத்த மாநில அரசிடம் கோரிக்கை விடுத்தனர். அதைத்தொடர்ந்து நாளை (சனிக்கிழமை) முதல் 16-ந் தேதி வரை முழு ஊரடங்கை கேரள அரசு அமல்படுத்தி உள்ளது.
இதன் காரணமாக அரசு பஸ்கள் உள்பட அனைத்து வாகன போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசிய சரக்கு போக்குவரத்திற்கு முன் அனுமதியுடன் அனுமதி வழங்கப்படும், அதே போல், பால், பத்திரிகை வினியோகத்திற்கு தடை இல்லை. மருத்துவ சேவை வழக்கம் போல் தொடர அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஒட்டல்களில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.
மளிகை, காய்கறி, பழக்கடைகள் மட்டும் காலை 7 மணி முதல் 11 மணி வரை செயல்பட முழு ஊரடங்கில் இருந்து விதி விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் முழு ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில,் தங்களை தாமே தனிமைப்படுத்தி, வீட்டை விட்டு வெளியே வராமல் ஒத்துழைப்பு வழங்க கேட்டுக் கொள்கிறோம். அரசு அலுவலகங்களில் 25 சதவீத பணியாளர்கள் மட்டும் பணி செய்வார்கள். தனியார் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தபடி பணி செய்வதை ஊக்குவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story