கைது செய்வதில் இருந்து அனில் தேஷ்முக்கிற்கு இடைக்கால பாதுகாப்பு வழங்க முடியாது; மும்பை ஐகோர்ட்டு உத்தரவு


கைது செய்வதில் இருந்து அனில் தேஷ்முக்கிற்கு இடைக்கால பாதுகாப்பு வழங்க முடியாது; மும்பை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 7 May 2021 8:57 AM IST (Updated: 7 May 2021 8:57 AM IST)
t-max-icont-min-icon

கைது செய்வதில் இருந்து முன்னாள் மந்திரி அனில் தேஷ்முக்கிற்கு இடைக்கால பாதுகாப்பு வழங்க முடியாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

வழக்குப்பதிவு

மும்பையில் தொழில் அதிபர் முகேஷ் அம்பானி வீட்டு அருகே வெடிகுண்டு கார் மீட்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த பரம்பீர் சிங் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து மதுபான விடுதிகள், ஓட்டல்களில் இருந்து மாதம் ரூ100 கோடி மாமூல் வசூலித்து தரும்படி மாநில உள்துைற மந்திரி அனில் தேஷ்முக் போலீசாரை கட்டாயப்படுத்தியதாக பரம்பீர் சிங் பரபரப்பு குற்றச்சாட்டினார்.இது தொடர்பான வழக்கில் அனில் தேஷ்முக் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதன் காரணமாக அனில் தேஷ்முக் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.இந்தநிலையில் கடந்த மாதம் 21-ந் தேதி அனில் தேஷ்முக் மீது ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் சி.பி.ஐ. அதிரடியாகவழக்குப்பதிவு செய்தது.

ஐகோர்ட்டு மறுப்பு

தனது மீதான வழக்குப்பதிவை ரத்து செய்யக்கோரி அனில் தேஷ்முக் கடந்த 3-ந் தேதி மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதிகள் எஸ்.எஸ். ஷிண்டே, மனிஷ் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. அப்போது, அனில் தேஷ்முக் மனு மீது 4 வாரத்தில் பதிளிக்கும்படி சி.பி.ஐ.க்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அப்போது குறிக்கிட்ட அனில் தேஷ்முக் வக்கீல், சி.பி.ஐ. பதில் மனு தாக்கல் செய்யும் வரை அவர் மீது கைது போன்ற நடவடிக்கை எடுக்கக்கூடாது என உத்தரவிடும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் அதுபோன்ற எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று நீதிபதிகள் மறுத்து விட்டனர். அதேவேளையில் அவசரம் என்றால் ஐகோர்ட்டின் விடுமுறை கால அமர்வில் அனில் தேஷ்முக் முறையிடலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஐகோர்ட்டு இடைக்கால பாதுகாப்பு எதுவும் வழங்க மறுத்து விட்டதால், அனில் தேஷ்முக் மீது கைது நடவடிக்கை எடுக்க சி.பி.ஐ.க்கு வாய்ப்பு ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story