உச்சம் தொட்ட கொரோனா: ராஜஸ்தானில் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு
உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பால் ராஜஸ்தானில் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.
ஜெய்ப்பூர்
ராஜஸ்தான் மாநிலத்தை பொறுத்தவரையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17 ஆயிரத்து 532 பேருக்கு பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. அம்மாநிலத்தில் மொத்த பாதிப்பு 7 லட்சத்தை தாண்டியுள்ளது.
மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5,182 ஆக உயர்வடைந்துள்ளது. தொற்று அதிகரித்து வரும் நிலையில், ராஜஸ்தானில் வரும் 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த உத்தரவின்படி வருகின்ற 31ம் தேதிக்கு பின்னரே திருமணங்கள் நடத்த அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற திருமணங்கள் மற்றும் 11 பேருக்கு குறைவானோர் கலந்து கொள்ள கூடிய வீட்டில் சிறிய அளவில் நடத்தப்படும் திருமணங்கள் ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மத வழிபாட்டு தலங்கள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும். அவசர கால உதவியாக தனியார், அரசு வாகனங்கள் மட்டும் செயல்படும். மாநிலத்துக்கு இடையேயான சரக்கு வாகனங்களுக்கு அனுமதி. வெளிமாநிலத்திலிருந்து வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
மளிகை காய்கறி கடைகள் சில மணி நேரம் மட்டுமே திறக்க அனுமதிக்கப்படும். அத்தியாவசியப் பணிகள், சேவைகள் தவிர அனைத்து விதமான செயல்பாடுகளும் முடக்கப்படுகின்றன.
கொரோனாவைத் தடுக்க ராஜஸ்தான் அமைச்சர்கள் தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழு நேற்று தன் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இதில் கொரோனாவைக் கட்டுப்படுத்த பொதுமுடக்கம் ஒன்றுதான் வழி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அமைச்சரவை ஆலோசனைக்குப் பிறகு முதலமைச்சர் அசோக் கெலாட் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவித்துள்ளார்.
Related Tags :
Next Story