“இது பழி போடுவதற்கான நேரம் அல்ல” - ஜார்க்கண்ட் முதல்-அமைச்சருக்கு ஜெகன் மோகன் ரெட்டி அறிவுரை


“இது பழி போடுவதற்கான நேரம் அல்ல” - ஜார்க்கண்ட் முதல்-அமைச்சருக்கு ஜெகன் மோகன் ரெட்டி அறிவுரை
x
தினத்தந்தி 7 May 2021 11:42 PM IST (Updated: 7 May 2021 11:42 PM IST)
t-max-icont-min-icon

கொரோனாவிற்க்கு எதிரான போரில் இது பழி போடுவதற்கான நேரம் அல்ல என்று ஆந்திர முதல்-அமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார்.

ஐதராபாத்,

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி, இது குறித்து மாநில முதல்-அமைச்சர்களுடன் ஆலோசனைகள் நடத்தி வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறார்.

அந்த வகையில், பிரதமர் மோடி நேற்று ஜார்கண்ட், ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா ஆகிய நான்கு மாநில முதல்-அமைச்சர்களுடன் காணொலி காட்சி வாயிலாக கொரோனா நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் தடுப்பூசி பணிகளின் வளர்ச்சி, தடுப்பூசிகளின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான வழிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டிருந்தது. 

பிரதமர் உடனான உரையாடல் குறித்து ஜார்கண்ட் முதல்-அமைச்சர் ஹேமந்த் சோரன் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘மான் கி பாத்’ நிகழ்ச்சியில் பேசுவது போல அவர் நினைப்பதை மட்டும் பிரதமர் பேசுகிறார் என்றும் மாநிலங்களின் பிரச்சினைகள், பணிகள் பற்றி பேசியிருந்தால், கேட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றும் பதிவிட்டிருந்தார்.

ஜார்கண்ட் முதல்-அமைச்சரின் இந்த பதிவிற்கு அந்த மாநில பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. அதனை தொடர்ந்து பல்வேறு மாநில முதல்-அமைச்சர்களும் ஹேமந்த் சோரனின் கருத்துக்கு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தின் முதல்-அமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், “மதிப்பிற்குரிய ஹேமந்த் சோரன் அவர்களே, நான் உங்களிடம் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். நமக்குள் வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும், இதுபோன்ற அரசியலில் ஈடுபடுவது நம் சொந்த தேசத்தை பலவீனப்படுத்தும். 

ஒரு சகோதரனாக இதை நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். கொரோனாவுக்கு எதிரான போரில் இது பழி போடுவதற்கான நேரம் அல்ல. தொற்றுநோயை எதிர்த்து போராட ஒன்றிணைந்து, நமது பிரதமரின் கரங்களை வலுப்படுத்த வேண்டிய நேரமிது” என்று பதிவிட்டுள்ளார். 

ஆந்திர முதல்-அமைச்சரின் இந்த பதிவிற்கு பாஜகவினர் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், ஒடிசா மாநில காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்.பி. சப்தகிரி உலாகா இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், அரசியல் லாபத்திற்காகவும், ரெய்டுகளுக்கு பயந்தும் ஆந்திர முதல்-அமைச்சர் இவ்வாறு பேசுவதாக குற்றம் சாட்டியுள்ளார். ஜெகன் மோகன் ரெட்டி மீது நில ஒதுக்கீடு தொடர்பான புகார் இன்னும் சில நாட்களில் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story