வாகன போக்குவரத்துக்கு முழு தடை உள்பட கூடுதல் கட்டுப்பாடுகளுடன் கர்நாடகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு-முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு


வாகன போக்குவரத்துக்கு முழு தடை உள்பட கூடுதல் கட்டுப்பாடுகளுடன்  கர்நாடகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு-முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு
x
தினத்தந்தி 7 May 2021 7:42 PM GMT (Updated: 7 May 2021 7:42 PM GMT)

கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை அதிவேகமாக பரவி வருகிறது. நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கி பதிவாகி வருகிறது. மேலும் வைரஸ் தொற்றுக்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

பெங்களூரு:
கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை அதிவேகமாக பரவி வருகிறது. நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கி பதிவாகி வருகிறது. மேலும் வைரஸ் தொற்றுக்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 
புதிய கட்டுப்பாடுகள்
இதைத்தொடர்ந்து கொரோனாவை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு கடந்த மாதம் அமல்படுத்தப்பட்டது. ஆனால் இந்த கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்து 10 நாட்களுக்கு பிறகும் கொரோனா பரவல் குறையவில்லை. இந்த கட்டுப்பாடுகள் வருகிற 11-ந் தேதியுடன் நிறைவடைகிறது. 
இந்த நிலையில் கர்நாடகத்தில் மேலும் சில புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார். 
இந்த ஆலோசனைக்கு பிறகு முதல்-மந்திரி எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
முழு ஊரடங்கு
கர்நாடகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகள்  விதிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் இந்த கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வரவில்லை. இதையடுத்து மேலும் சில கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்துள்ளோம். அதாவது வருகிற 10-ந் தேதி காலை 6 மணி முதல் 24-ந் தேதி காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்யப்படடுள்ளது.
அதன்படி புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன என்பதை அறிவிக்கிறேன்.
* வாகன போக்குவரத்து முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது. பொதுமக்கள் ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு செல்ல அனுமதி கிடையாது. அத்தியாவசிய சேவைகளுக்கு எந்த தடையும் இல்லை. 
* கட்டுமான பணிகளை தொழிலாளர்களை அங்கேயே தங்க வைத்து மேற்கொள்ள வேண்டும். தனியார் நிறுவனங்கள், அதே இடத்தில் ஊழியர்களை தங்க வைத்து செயலாற்ற வேண்டும். 
* காய்கறி கடைகள், இறைச்சி கடைகள், மளிகை கடைகள் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது.
நடமாட அனுமதி கிடையாது
* இரவு 10 மணிக்கு மேல் சாலையில் பொதுமக்கள் வாகனங்களில் செல்லவோ அல்லது நடமாடவோ அனுமதி கிடையாது. இந்த கட்டுப்பாடுகளை மிக தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன்.
* அத்தியாவசிய பொருட்களை வாங்க விரும்புவோர் வாகனங்களில் செல்ல அனுமதி இல்லை. அவர்கள் நடந்து மட்டுமே செல்ல வேண்டும். 
* பகல் நேரத்தில் வாகன போக்குவரத்துக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்கள், ரெயில் நிலையங்களுக்கு செல்வோருக்கு தடை இல்லை. சரக்கு வாகனங்கள் வழக்கம் போல் இயங்கலாம்.
கடைகள் திறக்கப்படலாம்
* பால் விற்பனை நிலையங்கள் முழு நேரமும் இயங்கலாம். ஆஸ்பத்திரிகளுக்கு செல்வோருக்கு எந்த தடையும் இல்லை. 
* மருத்துவத்துறை உபகரணங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் செயல்படும். இவற்றில் பணியாற்றும் ஊழியர்கள் பணிக்கு செல்ல தடை இல்லை. ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் ஊழியர்கள் பணிக்கு செல்லலாம். மருந்து கடைகள் திறக்கப்படலாம்.
* தள்ளுவண்டிகளில் காய்கறிகளை விற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவசர தேவைகளுக்கு ஆட்டோ, வாடகை கார்களை பயன்படுத்தலாம். விமான நிலையங்கள், ரெயில் நிலையங்களுக்கு செல்வோர் ஆட்டோ, வாடகை கார்களில் செல்ல தடை இல்லை. அரசின் இந்த கட்டுப்பாடுகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
பள்ளி, கல்லூரிகள்
* மெட்ரோ ரெயில் போக்குவரத்துக்கு அனுமதி இல்லை. 
*பள்ளி-கல்லூரிகள் உள்பட கல்வி நிலையங்கள் முழுமையாக மூடப்படும். 
* உணவகங்கள் செயல்படலாம். ஆனால் அவற்றில் பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் வாகனங்களில் வந்து பார்சல் வாங்கக்கூடாது. மக்கள் நடந்து வந்து உணவு பார்சல்களை வாங்கி செல்ல வேண்டும்.
* தியேட்டர்கள், பூங்காக்கள், மனமகிழ் மன்றங்கள், நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடங்கள், யோகா மையங்கள், மதுபான விடுதிகள், பொழுது போக்கு பூங்காக்களுக்கு  அனுமதி கிடையாது. 
* அனைத்து சமூக, அரசியல், விளையாட்டு, கல்வி, கலாசார, மத விழாக்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.
வங்கிகள்
* கர்நாடக அரசு துறைகளில் சுகாதாரம், மருத்துவ கல்வி, போலீஸ், ஊர்க்காவல் படை, சிறைத்துறை, தீயணைப்பு, பேரிடர் நிர்வாகம், வருவாய்த்துறைகள் வழக்கம் போல செயல்படும். 
* மின்சாரம், குடிநீர், துப்புரவுத்துறை இயங்கும். பெங்களூரு மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் இயங்கும்.
* வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், சுங்கத்துறை, பாதுகாப்புத்துறை, ரெயில்வே, விமானத்துறை, வரிகள் துறை போன்றவை எப்போதும் போல் செயல்படும். 
* விவசாயத்துறை பணிகளுக்கு தடை இல்லை. விளைபொருட்களை கொண்டு வந்து மார்க்கெட்டுகளில் விற்பனை செய்யலாம். ஆனால் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் அவற்றை முடித்துக் கொள்ள வேண்டும். 
* மின்னணு வணிகத்திற்கு எந்த தடையும் இல்லை.
வெளி மாநில வாகனங்கள்
* அவசர தேவைகளை தவிர்த்து வெளிமாநில வாகனங்கள் கர்நாடகத்திற்குள் நுழைய அனுமதி இல்லை. 
* அதிகாரிகள், பணியாளர்கள் அடையாள அட்டையை காண்பித்து மாவட்டங்களுக்கு இடையே பயணிக்கலாம். 
* மருத்துவமனைகளுக்கு செல்லும் நோயாளிகளுக்கு அனுமதி உண்டு. தடுப்பூசி போட்டுக்கொள்ள செல்பவர்களை தடுக்கக்கூடாது.
* ரேஷன் கடைகளை திறக்கலாம். 
* மதுபான கடைகளை திறக்க அனுமதிக்கப்படுகிறது. ஆனால் மது பாட்டில்களை பார்சலாக வாங்கி செல்லலாம். அங்கேயே அமர்ந்து மது அருந்த அனுமதி கிடையாது. 
* உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள், பத்திரிகை, ஊடகங்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், குளிர்பதன கிடங்குகள், தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 
* சாலை சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள தடை இல்லை.
144 தடை உத்தரவு
* ஏற்கனவே முடிவு செய்ய திருமண நிகழ்ச்சிகளை நடத்தலாம். ஆனால் அதில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். 
* துக்க நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 5 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். 
* மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும். 
* பெங்களூருவில் இருக்கும் தொழிலாளர்கள் யாரும் சொந்த ஊருக்கு செல்ல வேண்டாம். இங்கேயே இருந்து அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
பேட்டியின் போது, முதல்-மந்திரி எடியூரப்பா கூறும்போது, இது முழு ஊரடங்கு என்றார். ஆனால் தலைமை செயலாளர் ரவிக்குமார், இது முழு ஊரடங்கு இல்லை என்றும், கட்டுப்பாடுகளை மேலும் தீவிரமாக்கி உள்ளோம் என்றும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story