மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா, திரிணாமுல் காங்கிரஸ் இரு கட்சிகளும் வன்முறையில் ஈடுபடுகின்றன; சிவசேனா கருத்து


மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா, திரிணாமுல் காங்கிரஸ் இரு கட்சிகளும் வன்முறையில் ஈடுபடுகின்றன; சிவசேனா கருத்து
x
தினத்தந்தி 8 May 2021 1:45 AM GMT (Updated: 8 May 2021 1:45 AM GMT)

தேர்தலுக்கு பிந்தைய மேற்கு வங்காள வன்முறையில் பா.ஜனதா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் ஈடுபடுவதாக சிவசேனா கருத்து தெரிவித்து உள்ளது.

வன்முறை

தமிழ்நாடு, கேரளா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இதில் குறிப்பாக மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜனதாவுக்கும் நேரடி போட்டி நிலவியது. இதில் மம்தா பானர்ஜி மாபெரும் வெற்றியை பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இந்தநிலையில் தேர்தல் முடிவுக்கு பின்பு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே மோதல் காரணமாக மேற்கு வங்காளத்தில் வன்முறை வெடித்துள்ளது.

இதுகுறித்து சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் கூறியதாவது:-

17 பேர் இறப்பு

மேற்கு வங்காள மாநிலத்தில் பா.ஜனதா தோல்வி அடைந்ததில் இருந்து அங்கு வன்முறை வெடித்த செய்திகள் வெளிவருகிறது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் பா.ஜனதா ஆதரவாளர்களை தாக்குவதாக கூறப்படுகிறது. ஆனால் இது தவறாக பரப்பப்படும் தகவல்.

இதுவரை வாக்கெடுப்பு பிந்தைய வன்முறையில் 17 பேர் இறந்துள்ளனர். இதில் 9 பேர் பா.ஜனதா கட்சியையும், மற்றவர்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியையும் சேர்ந்தவர்கள் ஆவர். இதன் பொருள் இரு தரப்பினரும் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர் என்பதுதான்.

பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்க கவர்னரை தொடர்புகொண்டு நிலைமையை விசாரிக்கிறார். பா.ஜனதா கட்சியின் மூத்த அதிகாரி ஒருவர் ஐகோர்ட்டில் வன்முறைக்கு மம்தா பானர்ஜி பொறுப்பு ஏற்கவேண்டும் என்றும், மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தவேண்டும் என்கிறார்.

இது அனைத்தும் பா.ஜனதா ஒரு மோசமான விளையாட்டில் ஈடுபடுவதை வெளிச்சம்போட்டு காட்டுகிறது.

ஜனநாயகம் இல்லை

2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு மேற்கு வங்காளத்தில் 18 இடங்கள் கிடைத்தன. இதை தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது. டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடைந்த பின்னர் அங்கும் இதேபோல வன்முறை வெடித்தது. கொரோனா வைரஸ் நாட்டில் பல உயிர்களை கொன்று வருகிறது. இதற்கிடையே கலவரங்கள் மூலமாக அரசியல் விளையாடி நாட்டை இழிவுபடுத்துவது ஏன்?

மேற்கு வங்கத்தில் அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொறுப்பு மம்தா பானர்ஜியை போலவே மத்திய அரசுக்கும் உள்ளது. இதை சிலர் மறந்துவிட்டது ஆச்சரியமளிக்கிறது. மேற்கு வங்க தேர்தலில் பா.ஜனதா தலைவர் திலீப் கோஷ் மற்றும் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தின் பேச்சு வன்முறையை தூண்டும் வகையில் அமைந்தது.

இங்கு தேர்தலுக்கு பிந்தைய வன்முறை அரசியலின் கொடூரமான பக்கத்தை காட்டுகிறது. மேலும் இதுவெறும் அதிகாரத்திற்கான போட்டி, ஜனநாயகம் இல்லை என்பதை காட்டுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story