ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவரும் உயிரிழக்க கூடாது: அதிகாரிகளுக்கு கெஜ்ரிவால் உத்தரவு
ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவரும் உயிரிழக்க கூடாது என அதிகாரிகளுக்கு டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் உத்தரவிட்டு உள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியில் கெரோனா பாதிப்பு சூழ்நிலை பற்றிய உயர்மட்ட குழு கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால், அடுத்த 3 மாதங்களில் தகுதியுடைய அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கொரோனா தடுப்பூசி மையங்கள் மற்றும் நிவாரண முகாம்களுக்கு மாவட்ட மாஜிஸ்திரேட்டுகள் திடீர் பயணம் செய்து பொதுமக்களின் வசதிகளுக்கான ஏற்பாடுகள் பற்றி மறுஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து பேசும்பொழுது, டெல்லிக்கு ஆக்சிஜன் கிடைத்துள்ளது. அதனால், டெல்லியில் உள்ள ஒருவரும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழக்க கூடாது. டெல்லியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் படுக்கை வசதிகளை அதிகரிக்க வேண்டும்.
ஒவ்வொரு மாவட்ட மாஜிஸ்திரேட்டும் தங்களுடைய மாவட்டங்களில் புதிய ஆக்சிஜன் படுக்கைகளை ஏற்பாடு செய்ய வேண்டும். இதனால் உயிரிழப்புகளை தடுக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
ஆக்சிஜன் மிக முக்கியம். அதனால் திறமையாக அதனை பயன்படுத்த வேண்டும். ஆக்சிஜன் வீணாகாமல் தடுக்க நாம் முயற்சிக்க வேண்டும். முடிந்தவரை அவற்றை சேமிக்க முயற்சிக்க வேண்டும். அப்படி செய்து, மத்திய அரசுக்கே நாம் அவற்றை திருப்பி அளிக்க முடியும். அதனால் வேறு சில இடங்களுக்கு அவை பயன்பட கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story