‘கோ-வின்’ போன்ற வலைத்தளத்தை பெற 50 நாடுகள் விருப்பம்

தங்கள் நாட்டில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவதற்காக ‘கோ-வின்’ போன்ற வலைத்தளத்தை வைத்திருக்க 50 நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன. அதற்கான மென்பொருளை மத்திய அரசு இலவசமாக வழங்குகிறது.
கோ-வின்
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவதற்காக ‘கோ-வின்’ வலைத்தளத்தை மத்திய அரசு உருவாக்கியது. அதில், தடுப்பூசி போடுவதற்கு பெயர் பதிவு செய்யும் வசதியும், தடுப்பூசி கையிருப்பு மற்றும் வினியோகம் உள்ளிட்ட தகவல்களும் இடம்பெற்றுள்ளன. அதில், ஒருவருக்கு தடுப்பூசி போடுவதற்கான நாள், நேரம் ஒதுக்கப்படுகிறது. அந்த முன்பதிவை நீக்கும் வசதியும் உள்ளது. 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு அதற்கான சான்றிதழையும் அதில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்தநிலையில், இதுபோன்ற வலைத்தளத்தை பெற 50 நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன. இதை கொரோனா தடுப்பூசி திட்டத்துக்கான அதிகாரமய குழுவின் தலைவர் டாக்டர் ஆர்.எஸ்.சர்மா தெரிவித்தார்.
மோடி உத்தரவு
டெல்லியில், இந்திய தொழில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த பொது சுகாதார மாநாட்டில் அவர் பேசியதாவது:-
130 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடுவது எளிதான காரியம் அல்ல. ஆனால், ‘கோ-வின்’ வலைத்தளத்தை உருவாக்கியதன் மூலம் அதை இந்தியா சாத்தியம் ஆக்கி இருக்கிறது. இந்த வலைத்தளம் தொடங்கப்பட்ட 5 மாதங்களில், 30
கோடிக்கு மேற்பட்ட பதிவுகளை அது கையாண்டுள்ளது. ‘கோ-வின்’ மிகவும் பிரபலம் ஆகிவிட்டது. அதுபோன்ற வலைத்தளத்தை பெற சுமார் 50 நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன. மத்திய ஆசியா, லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா
ஆகியவற்றை சேர்ந்த நாடுகளும், கனடா, மெக்சிகோ, பனாமா, பெரு, அஜர்பைஜான், உக்ரைன், நைஜீரியா, உகாண்டா உள்ளிட்ட நாடுகளும் இந்த விருப்பத்தை தெரிவித்துள்ளன. அந்த நாடுகளிடம் ‘கோ-வின்’ எப்படி செயல்படுகிறது என்பதை கூறி வருகிறோம். அதன் மூலவடிவ மென்பொருளை உருவாக்கி, அதை அந்த நாடுகளுக்கு இலவசமாக கொடுக்குமாறு பிரதமர் மோடி கூறியுள்ளார். அதன்படி, நாங்கள் இலவசமாக அளிப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story