மராட்டிய வரலாற்றில் ஊழல் நிறைந்தது மகாவிகாஸ் அகாடி ஆட்சி தேவேந்திர பட்னாவிஸ் பதிலடி


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 16 Oct 2021 11:37 PM GMT (Updated: 16 Oct 2021 11:37 PM GMT)

மராட்டிய வரலாற்றில் மகாவிகாஸ் அகாடி ஆட்சி தான் ஊழல் நிறைந்த ஆட்சி என தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.

மும்பை,
மராட்டிய வரலாற்றில் மகாவிகாஸ் அகாடி ஆட்சி தான் ஊழல் நிறைந்த ஆட்சி என தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
நம்பர் ஒன் கட்சி
சிவசேனாவின் தசரா பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு மும்பையில் உள்ள சண்முகானந்தா அரங்கில் நடந்தது. கூட்டத்தில் பேசிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மத்திய அரசு, பா, ஜனதாவை கடுமையாக விமர்சித்து பேசினார். அமலாக்கத்துறை, சி.பி.ஐ. போன்ற மத்திய விசாரணை முகமைகளை வைத்து தங்களை எதிர்க்காமல்,  முடிந்தால் நேரடியாக மோதி அரசை கவிழ்த்து பாருங்கள் என்று சவால் விட்டார். 
உத்தவ் தாக்கரேவின் பேச்சுக்கு பதில் அளிக்கு வகையில் பா.ஜனதாவை சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:- 
உத்தவ் தாக்கரேவின் பேச்சில் அவரது விரக்தி வெளிப்படுகிறது. நீங்கள் (உத்தவ் தாக்கரே) பா.ஜனதாவை களங்கப்படுத்த முயற்சி செய்யலாம், ஆனால் அந்த கட்சி வலுவாக உள்ளது.
மாநிலத்தில் பா.ஜனதா தான் நம்பர் ஒன் கட்சி என்பதை நீங்கள் நினைவில் வைத்து கொள்ள வேண்டும். பா.ஜனதாவை மக்கள் புறக்கணித்ததாக கூறுகிறீர்கள். உண்மையில் மக்கள் தேசியவாத காங்கிரஸ், காங்கிரசை தான் புறக்கணித்தார்கள்.
ஆசையை நிறைவேற்றிய உத்தவ் தாக்கரே
 நாம் (பா.ஜனதா, சிவசேனா) கூட்டணி அமைத்து போட்டியிட்ட இடங்களில், பா.ஜனதா 70 சதவீத இடங்களிலும், சிவசேனா 45 சதவீத இடங்களிலும் வெற்றி பெற்று இருந்தது.
 நீங்கள் மக்கள் வாக்குகளை வைத்து நேர்மையற்ற செயலில் ஈடுபட்டு ஆட்சி அதிகாரத்திற்கு வந்தீர்கள். இந்த அரசு நேர்மையின்றி அமைக்கப்பட்டது. மரியாதைக்குரிய உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி ஆக வேண்டும் என்ற ஆசையில் இருந்து அதை தற்போது நிறைவேற்றி கொண்டார் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்.
அரசியலில் ஆசைகள் தவறில்லை. ஆனால் நீங்கள் சொன்ன வாக்கை காப்பாற்ற வேண்டும் என்றால் மூத்த தலைவர்கள் திவாகர் ராவ்தே, சுபாஷ் தேசாய், ஏக்னாத் ஷிண்டே என யாரையாவது ஒருவரை முதல்-மந்திரி ஆக்கியிருக்கலாம். 
நாராயண் ரானே, ராஜ்தாக்கரே
நீங்கள் உண்மையில் முதல்-மந்திரி ஆக வேண்டும் என விரும்பவில்லை என்றால் நாராயண் ரானே ஏன் கட்சியை விட்டு சென்றார்?. நாராயண் ரானே கட்சியின் தலைவர் ஆக வேண்டும் என்று விரும்பவில்லை. 
அதே போல ராஜ் தாக்கரே ஏன் கட்சியை விட்டு சென்று இருக்க வேண்டும். உங்களுக்கு முதல்-மந்திரி ஆக வேண்டும் என்ற ஆசை இருந்து இருந்தால் பரவாயில்லை, ஆனால் பா.ஜனதாவை குற்றம் சொல்வதை நிறுத்தி கொள்ளுங்கள்.
ஊழல் நிறைந்த அரசு
இதேபோல சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்ற மத்திய முகமைகள் ஐகோர்ட்டின் உத்தரவை அடுத்து விசாரணை நடத்துகின்றன. ஏனெனில் மராட்டிய வரலாற்றில் உங்கள் தலைமையிலான மகாவிகாஸ் அகாடி அரசு தான் அதிக ஊழல் நிறைந்தது. மராட்டிய அரசியலில் ஊழல் மிகுந்த ஆட்சி உங்களுடையது தான் என வரலாற்றில் பதிவாகும் என்பதை நீங்கள் நினைவில் வைத்து கொள்ள வேண்டும். 
பணம் பறித்தல் தான் இந்த அரசின் பிரதான குறிக்கோள். வருமான வரித்துறை சோதனை மாநிலத்தில் அதிக ஊழல் நடந்து இருப்பதை வெளிப்படுத்தி உள்ளது. எவ்வளவு பணம் வசூலிக்க முடியும் என்பதை அறிய சில மந்திரிகள் சாப்ட்வேர் வைத்திருக்கும் அளவுக்கு மாமூல் வசூலிப்பது அதிகரித்து உள்ளது. அப்படியென்றால் சி.பி.ஐ., அமலாக்கத்துறை வர தான் செய்வார்கள். 
 மோடி ஓய்வெடுக்க மாட்டார்
பிரதமர் மோடி ஒருபோதும் மத்திய முகமைகளை தவறாக பயன்படுத்தியது இல்லை. மத்திய முகமைகள் தவறாக பயன்படுத்தப்பட்டு இருந்தால் உங்களின் பாதி மந்திரிகள் தற்போது ஜெயிலில் தான் இருந்து இருப்பார்கள். ஆனால் நாங்கள் ஜனநாயகத்தை நம்புகிறோம். ஒருபோதும் விசாரணை முகமைகளை தவறாக பயன்படுத்த மாட்டோம். அதே நேரத்தில் ஊழலை வேரோடு அழிக்கும் வரை மோடி ஒய்வெடுக்கமாட்டார்.
இதேபோல மராட்டியத்தை மேற்கு வங்காளமாக மாற்ற பா.ஜனதா ஒருபோதும் அனுமதிக்காது. மராட்டியம், மராட்டியமாகவே இருக்கும். ஆட்சியை கவிழ்ப்பதில் எங்களுக்கு விருப்பமில்லை. மக்கள் நலப்பிரச்சினைகளில் தான் கவனம் செலுத்துகிறோம். நீங்கள் ஏன் எப்போது ஆட்சி கவிழ்ப்பு பற்றியே பேச வேண்டும்?. அதைவிட்டு நீங்கள் மக்கள் பிரச்சினைகளை தீர்க்கலாம். உங்கள் பணியை காட்டுங்கள். விவசாயிகளுக்கு உதவ முடியும் என்பதை காட்டுங்கள். அரசை நடத்த முடியும் என காட்டுங்கள். 
இவ்வாறு அவர் கூறினார்.
--------------------

Next Story