கிரிப்டோகரன்சி மசோதா தாக்கல் எப்போது? - நிர்மலா சீதாராமன் தகவல்


கிரிப்டோகரன்சி மசோதா தாக்கல் எப்போது? - நிர்மலா சீதாராமன் தகவல்
x
தினத்தந்தி 1 Dec 2021 3:18 AM IST (Updated: 1 Dec 2021 3:18 AM IST)
t-max-icont-min-icon

கிரிப்டோகரன்சி மசோதா, மத்திய மந்திரிசபையின் ஒப்புதலைப்பெற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

புதுடெல்லி, 

கிரிப்டோகரன்சி என்றழைக்கப்படுகிற மெய்நிகர் நாணயம் தொடர்பாக மசோதா ஒன்றை கொண்டுவர மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு ஆர்வம் கொண்டுள்ளது. அந்த வகையில், மெய்நிகர் நாணயம் மற்றும் அதிகாரபூர்வ டிஜிட்டல் நாணய ஒழுங்குமுறை மசோதா, மக்களவை செய்தி ஏடு-பாகம் 2-ல் சேர்க்கப்பட்டுள்ளது. இது, நடப்பு குளிர் கால கூட்டத்தொடரின்போது, இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த மசோதா டிஜிட்டல் நாணயம் ஒன்றை பாரத ரிசர்வ் வங்கி உருவாக்க தேவையான எளிதான கட்டமைப்பை ஏற்படுத்தும். மேலும், இந்தியாவில் அனைத்து தனியார் மெய் நிகர் நாணயங்களை தடை செய்வதுடன், மெய்நிகர் நாணயத்தின் அடிப்படை தொழில்நுட்பத்தையும், அதன் பயன்பாடுகளையும் மேம்படுத்த சில விதிவிலக்குகளையும் அனுமதிக்கும்.

இந்த மசோதா தொடர்பான கேள்விகளுக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், மாநிலங்களவையில் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய மந்திரிசபை தனது ஒப்புதலை வழங்கிய உடன் மெய்நிகர் நாணயம் மற்றும் அதிகாரபூர்வ டிஜிட்டல் நாணய ஒழுங்குமுறை மசோதா சபையில் தாக்கல் செய்யப்படும். இதைபோன்றதொரு மசோதா கடந்த கூட்டத்தொடரின்போது பட்டியலிடப்பட்டது. ஆனால் எடுத்துக்கொள்ளப்படவில்லை. 

தற்போது நிறைய விஷயங்கள் விரைவாக செயல்பட வேண்டியதிருந்ததால் புதிய மசோதாவை உருவாக்கத்தொடங்கினோம். அந்த மசோதாதான் வர உள்ளது. இது விரைவில் தாக்கலாகும். கிரிப்டோகரன்சியை பொறுத்தமட்டில் இந்தியாவில் ஒழுங்குபடுத்தப்படவில்லை. இதன் பரிமாற்றம் பற்றிய தரவுகளை அரசு சேகரிக்கவும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story