சபரிமலையில் அப்பம், அரவணை விற்க கூடுதல் கவுண்ட்டர்கள் திறப்பு - அதிகாரி தகவல்
சபரிமலையில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் அப்பம், அரவணை விற்பனைக்கு கூடுதல் கவுண்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தான செயல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்,
இதுகுறித்து திருவிதாங்கூர் தேவஸ்தான செயல் அலுவலர் கிருஷ்ணகுமார வாரியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சபரிமலைக்கு தற்போது வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சன்னிதானத்தில் அப்பம், அரவணை விற்பனைக்கான கவுண்ட்டர்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
அதன்படி சன்னிதானத்தில் அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக கூடுதலாக 2 கவுண்ட்டர்கள் திறக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 8 கவுண்ட்டர்களில் அப்பம் மற்றும் அரவணை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அபிஷேகத்திற்கான நெய்யினை பக்தர்களிடம் இருந்து பெறுவதற்காக சன்னிதானத்தில் கோவிலின் பின் புறத்திலும், வடக்கு பகுதியிலும் ஒவ்வொன்று வீதம் 2 மையங்கள் செயல்பட்டு வருகிறது. அபிஷேகம் செய்யப்பட்ட நெய்யை பக்தர்கள் பெற மராமத்து காம்ப்ளக்சின் கீழ் பகுதியில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதால், அப்பம், அரவணை விற்பனை கவுண்ட்டர்களை அதிகரிப்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும். அய்யப்ப பக்தர்கள் ஆன்லைன் காணிக்கை செலுத்த வசதியாக நிலக்கல், சன்னிதானத்தில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. கூகுள் பே மூலமாக பணம் செலுத்த நிலக்கல், சன்னிதானத்தில் 22 இடங்களில் அதற்கான வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. அய்யப்ப பக்தர்கள் இந்த வசதியை பயன்படுத்தி 9495999919 என்ற எண்ணிற்கு ஆன் லைன் காணிக்கை செலுத்தலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story