12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் விவகாரம்: எதிர்க்கட்சிகள் 2-வது நாளாக ஆர்ப்பாட்டம்
12-ம் எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டத்தை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் 2-வது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுடெல்லி,
நாடாளுமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது, எதிர்க்கட்சிகளை சேர்ந்த சில எம்.பி.க்கள் நாடாளுமன்ற மரபை மீறி மேஜைகள் மீது ஏறியும், கோஷங்களை எழுப்பியும், கோப்புகளை தூக்கி எறிந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளை சேர்ந்த 12 எம்.பி.க்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நாடாளுமன்ற விவகாரத்துறை பரிந்துரை செய்தது.
இதனை தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் நாடாளுமன்ற மாண்பை மீறும் வகையில் செயல்பட்டதாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 12 பேரையும் நடப்பு கூட்டத்தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்து அவை துணைஅவைத்தலைவர் அறிவித்தார்.
இந்த சஸ்பெண்ட் நடவடிக்கையை திரும்பப்பெற வேண்டும் என எதிர்க்கட்சிகள் மக்களவை சபாநாயகர் வெங்கையா நாயுடுவிடம் நேற்று கோரிக்கை விடுத்தனர்.
ஆனால், அந்த கோரிக்கையை சபாநாயகர் ஏற்கமறுத்ததையடுத்து நேற்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் இருந்தும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அவர்கள் காந்தி சிலை முன் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து இரண்டாவது நாளாக எதிர்க்கட்சிகள் இன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் இன்று திரண்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 12 எம்.பி.க்களின் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உள்பட பலர் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story