மே.வங்காளம்: அனுமதியின்றி செயல்பட்ட பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 3 பேர் பலி


மே.வங்காளம்: அனுமதியின்றி செயல்பட்ட பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 3 பேர் பலி
x
தினத்தந்தி 1 Dec 2021 8:19 AM GMT (Updated: 1 Dec 2021 8:19 AM GMT)

மேற்குவங்காளத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

கொல்கத்தா,

மேற்குவங்காள மாநிலம் தெற்கு 24 பர்கானஸ் மாவட்டம் நோடஹலி என்ற பகுதியில் உரிய அனுமதியின்றி பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது. சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த இந்த பட்டாசு ஆலையில் இன்று காலை ஊழியர்கள் சிலர் வேலை செய்துகொண்டிருந்தனர்.

அப்போது, பட்டாசு ஆலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தின் போது பட்டாசு ஆலை அமைந்திருந்த 2 அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்தது.

இந்த வெடிவிபத்தில் கட்டிட இடிபாடுகளுக்குள் பட்டாசு ஆலையில் வேலை செய்த 6 பேர் சிக்கிக்கொண்டனர். வெடிவிபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கிய 3 பேரை படுகாயங்களுடன் மீட்டனர். 

ஆனாலும், இந்த வெடிவிபத்தில் பட்டாசு ஆலையில் வேலை செய்துகொண்டிருந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது தொடர்பாகவும், இந்த வெடிவிபத்து தொடர்பாகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story