திருப்பதி மலைப்பாதையில் மண் சரிவு: தரிசன டிக்கெட் தேதியை 6 மாதங்களுக்குள் மாற்றிக்கொள்ளலாம்


திருப்பதி மலைப்பாதையில் மண் சரிவு: தரிசன டிக்கெட் தேதியை 6 மாதங்களுக்குள் மாற்றிக்கொள்ளலாம்
x
தினத்தந்தி 2 Dec 2021 12:58 AM IST (Updated: 2 Dec 2021 1:48 AM IST)
t-max-icont-min-icon

கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் சமீபகாலமாக மழை பெய்து வருகிறது.

திருமலை,

திருப்பதி 2-வது மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், பக்தர்கள் 6 மாதத்துக்குள் தரிசன தேதியை மாற்றிக்கொள்ளலாம், எனக் கூறினார்.

திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் 2-வது மலைப்பாதை, நிலச்சரிவால் மோசமாக சேதமடைந்துள்ளது. அதில் சாலை, தடுப்புச்சுவர் ஆகியவை பலத்த சேதம் அடைந்துள்ளது. பாறைகள் விழுந்த இடத்தில் அதிர்வால் சாலையில் பயங்கர விரிசல் ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். நிலச்சரிவை அப்புறப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க வேண்டும், என அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.

அப்போது ஒய்.வி.சுப்பாரெட்டி கூறியதாவது:-

திருப்பதி 2-வது மலைப்பாதையில் 14, 16-வது கிலோ மீட்டர் தூரத்தில் அடுத்தடுத்து 4 இடங்களில் ெபரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. ஏழுமலையானின் கருணையால் பக்தர்களுக்கும், வாகனங்களுக்கும் எந்த இடையூறும் ஏற்படவில்லை.

கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் சமீபகாலமாக மழை பெய்து வருகிறது. இதனால் மலைப்பாதையில் மண் அரிப்பு ஏற்பட்டு பாறைகள், மரங்கள் சரிகின்றன. இந்த நிலச்சரிவு நேற்று அதிகாலை 5.40 மணிக்கு நடந்துள்ளது. அதிகாலை 5.45 மணிக்கு அந்த வழியாக திருப்பதியில் இருந்து திருமலையை நோக்கி அரசு பஸ் பக்தர்களை ஏற்றி சென்றுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட நேரத்தில் பயங்கர சத்தமும், அதிர்வும் ஏற்பட்டுள்ளது.

உடனே டிரைவர் பஸ்சை நிறுத்தி விட்டு கீழே இறங்கி பார்த்துள்ளார். சம்பவ இடத்தில் புைக மண்டலம் போல் காட்சியளித்துள்ளது. நிலச்சரிவு எற்பட்ட இடத்தில் புழுதி பறந்து, புகை மூட்டமாக காணப்பட்டுள்ளது. டிரைவர் தான், முதலி்ல் தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் இன்னும் மேலும் 5 பெரிய பாறைகள் சரிந்து விழும் அபாயத்தில் உள்ளன. அந்தப் பாறைகள் விரைவில் அகற்றப்படும். மலைப்பாதையும் விரைவில் சீரமைக்கப்படும். அலிபிரி நடைபாதையில் பக்தர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. பக்தர்கள் வழக்கம்போல் நடந்து வரலாம்.

ஆன்லைனில் தரிசன டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து வாகனங்களில் திருமலைக்கு வரும் பக்தர்கள் கனமழை காரணமாக பயணத் தேதியை ஒத்திவைக்கலாம். அவ்வாறு ஒத்தி வைக்கும் பக்தர்கள் தங்களின் தரிசன தேதியை 6 மாதங்களுக்குள் மாற்றிக் கொள்ளலாம். நிலச்சரிவால் ரூ.4 கோடி மதிப்பில் மலைப்பாதையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story