‘குடும்பம் இல்லாதவர்களுக்கு குடிமக்கள் பற்றி அக்கறை இருக்காது’ யோகி ஆதித்யநாத் மீது அகிலேஷ் தாக்கு


‘குடும்பம் இல்லாதவர்களுக்கு குடிமக்கள் பற்றி அக்கறை இருக்காது’ யோகி ஆதித்யநாத் மீது அகிலேஷ் தாக்கு
x
தினத்தந்தி 2 Dec 2021 3:22 AM IST (Updated: 2 Dec 2021 3:22 AM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரசாரம் சூடுபிடிக் கத் தொடங்கியுள்ளது.

லக்னோ, 

உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரசாரம் சூடுபிடிக் கத் தொடங்கியுள்ளது. ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சிகளும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகள், விமர்சனங்களை வீசி வருகின்றன.

இந்நிலையில் ‘சமாஜ்வாடி விஜய் ரத யாத்திரை’ என்ற யாத்திரையை தொடங்கியுள்ள சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், அந்த யாத்திரையின்போது பாண்டா நகரில் நேற்று பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், ‘எங்களுக்கு குடும்பம் இருக்கிறது. அதனால் ஒரு தொழிலாளி அல்லது விவசாயி இறக்கும்போது அவர்களது குடும்பம் என்ன பாடுபடும் என்று எங்களுக்குத் தெரியும். குடும்பத்தை நடத்துபவர்களால்தான் ஒரு சாதாரண குடும்பத்தின் கஷ்டத்தை புரிந்துகொள்ள முடியும். குடும்பம் இல்லாதவர்களுக்கு அதெல்லாம் தெரியாது, அவர்களுக்கு குடிமக்களைப் பற்றி அக்கறை இருக்காது’ என்று யோகி ஆதித்யநாத்தை மறைமுகமாக தாக்கினார்.

மேலும், ‘யோகி அரசாங்கம் வேண்டுமா, யோக்கிய (திறன்மிக்க) அரசாங்கம் வேண்டுமா என்று மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்’ என்றார்.

Next Story