அரசியல் சந்தர்ப்பவாதி; மம்தா மீது காங்கிரஸ் கடும் தாக்கு


அரசியல் சந்தர்ப்பவாதி; மம்தா மீது காங்கிரஸ் கடும் தாக்கு
x
தினத்தந்தி 3 Dec 2021 4:30 AM IST (Updated: 3 Dec 2021 4:30 AM IST)
t-max-icont-min-icon

மம்தா பானர்ஜி அரசியல் செய்வது சந்தர்ப்பவாதம் என்று காங்கிரஸ் தலைமை செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறினார்.

புதுடெல்லி,

ஐக்கிய முற்போக்கு கூட்டணியே தற்போது இல்லை என்று மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறிய நிலையில், காங்கிரஸ் தலைமை செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

மம்தா பானர்ஜி ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு மாதிரி பேசுகிறார். அவர் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் மாறி மாறி சென்றவர். பா.ஜனதாவுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என்று கடந்த ஆகஸ்டு 20-ந் தேதி அவர் கூறினார்.

ஆனால் தற்போது கோவா, உத்தரகாண்ட் ஆகிய மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரசுக்கு எதிராக போட்டியிடுகிறார். இது மம்தா பானர்ஜிக்கு அரசியல் சமயோசிதமாக தெரியலாம். ஆனால், அவர் செய்வது அரசியல் சந்தர்ப்பவாதம். இதன்மூலம், தான் எதிர்ப்பதாக நடிக்கும் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். போன்ற பாசிச சக்திகளுக்கு அவர் மறைமுகமாக உதவுகிறார்.

பிரதமர் மோடி செய்வதையே மம்தாவும் செய்து கொண்டிருக்கிறார். மோடி, எம்.எல்.ஏ.க்களை வாங்கினார். மம்தாவும் அதையே செய்கிறார். மோடி, கட்சிகளை உடைத்தார். மம்தாவும் அதையே செய்கிறார். முன்பு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரிடம் மம்தா உத்வேகம் பெற்றார். இப்போது, பாசிசத்தை தனது உத்வேகமாக கொண்டுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story