கேரளாவில் பயங்கரம்: 11 முறை கத்தியால் குத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகி கொடூரக்கொலை


கேரளாவில் பயங்கரம்: 11 முறை கத்தியால் குத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகி கொடூரக்கொலை
x
தினத்தந்தி 3 Dec 2021 2:45 AM GMT (Updated: 3 Dec 2021 2:45 AM GMT)

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் திருவள்ளா தாலுகா பிரிங்கரா பகுதியை சேர்ந்தவர் சந்தீப் குமார். 34 வயதான சந்தீப் குமார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியை சேர்ந்தவர். இவர் பிரிங்கரா பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கமிட்டி செயலாளராக செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில், திருவள்ளாவில் உள்ள சேத்தன்ஹரி பகுதியில் நேற்று இரவு 8 மணியளவில் சந்தீப் குமார் தனது பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, அவரை பின் தொடர்ந்து சென்ற சிலர் சந்தீப் குமாரின் பைக்கை திடீரென இடைமறித்தனர். மேலும், அந்த கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு சந்தீப் குமாரை 11 முறை கொடூரமாக குத்தினர்.

கத்திக்குத்து தாக்குதலின் போது சந்தீப்குமாரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர். ஆனால், உள்ளூர்வாசிகள் வருவதற்குமுன்னர் தாக்குதல் நடத்திய அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டது. இந்த கொடூர கத்திக்குத்து தாக்குதலில் சந்தீப்குமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து பரிதாபமாக உயிரிழந்தார். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சந்தீப்குமாரின் உடலை கைப்பற்றி பிரதேபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

சந்தீப்குமாரை 5 இளைஞர்கள் கொண்ட கும்பல் கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்றதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர். 

இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கனியம்பரம்பில் ஜிஷூனு மற்றும் ஸ்ரீஜித் ஆகிய 2 பேருக்கு இந்த கொலையில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகித்துள்ளனர். அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். சந்தேகிக்கப்படும் நபர்கள் இருவரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் என உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், தங்கள் கட்சி நிர்வாகி சந்தீப்குமாரை ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரே கொலை செய்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த குற்றச்சாட்டிற்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. 

Next Story