ஒமைக்ரான் எதிரொலி; பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை பரிசோதனை
ஒமைக்ரான் எதிரொலியாக கர்நாடகாவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை பரிசோதனை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு,
தென்ஆப்பிரிக்காவில் தோன்றிய புதிய வகை ஒமைக்ரான் கொரோனா பாதிப்புகள் பல்வேறு உலக நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவில் முதன் முறையாக கர்நாடக மாநிலத்தில் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநில அரசு பல்வேறு புதிய நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளது.
இதன்படி பள்ளிகளில் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ளும் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் அனைவரும் கட்டாயமாக 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். அப்படி இல்லையெனில் அந்த மாணவர்கள் பள்ளிகளில் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
அது மட்டுமின்றி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கலை மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் போன்றவற்றை வருகின்ற ஜனவரி 15 வரை தள்ளி வைக்க வேண்டும் என்று அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கர்நாடகாவில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த உத்தரவுகளை அரசு பிறப்பித்து உள்ளது.
Related Tags :
Next Story