குஜராத்: ராஜ்கோட்டில் இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் ஸ்மார்ட்போன் பரிசு!
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வோருக்கு ஸ்மார்ட்போன் பரிசாக வழங்கப்படும் என்று நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ராஜ்கோட்,
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகமெடுத்து வருகின்றன. கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி தட்டுப்பாடில்லாமல் கிடைத்து வருவதால் பொதுமக்கள் அனைவருக்கும் இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்த மத்திய மாநில அரசுகள் மும்முரம் காட்டி வருகின்றன.
அதில் ஒரு நடவடிக்கையாக, குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகராட்சி ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் 50 ஆயிரம் மதிப்பிலான ஸ்மார்ட்போன் பரிசு என்பதே அந்த அறிவிப்பு ஆகும். இந்த அறிவிப்பு பொதுமக்களை அதிகமாக ஈர்த்துள்ளது எனலாம்.
ராஜ்கோட்டில் டிசம்பர் மாதம் 4ம் தேதியிலிருந்து 10ம் தேதிக்குள்ளான காலகட்டத்தில் இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வோருக்கு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு ஸ்மார்ட்போன் பரிசு வழங்கப்படும் என்று ராஜ்கோட் நகராட்சி ஆணையர் அமித் அரோரா தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது:-
‘ராஜ்கோட் நகராட்சி சுகாதார மையங்களின் சார்பில் சிறு சிறு குழுக்களாக பிரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. அதன்படி, மேற்குறிப்பிட்ட காலகட்டத்தில் எந்த சுகாதார குழு அதிக எண்ணிக்கையிலான பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்தி சாதனை படைக்கிறார்களோ அவர்களுக்கு ரூபாய் 21 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுபடுத்தும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.’
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story