பயங்கரவாதிகள் என சந்தேகம்: பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 13 பேர் பலி- நாகலாந்தில் பதற்றம்


பயங்கரவாதிகள் என சந்தேகம்: பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 13 பேர் பலி- நாகலாந்தில் பதற்றம்
x
தினத்தந்தி 5 Dec 2021 11:00 AM IST (Updated: 5 Dec 2021 12:47 PM IST)
t-max-icont-min-icon

பயங்கரவாதிகள் எனக்கருதி நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.

கோஹிமா,

வடகிழக்கு மாநிலமான நாகலாந்தில் மியான்மர் எல்லைப் பகுதியில் உள்ளது மோன் மாவட்டம். இந்த மாவட்டத்தின் ஒடிங் மற்றும் திரு  என்ற கிராமத்தை சேர்ந்த தொழிலாளர்கள், அங்குள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றி விட்டு நேற்று மாலை வேன் ஒன்றில் வீடு திரும்பி கொண்டு இருந்தனர்.

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த பாதுகாப்பு படையினர், வேனில் வந்த தொழிலாளர்களை கிளர்ச்சியாளர்கள் எனக்கருதி தவறுதலாக  துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர்  கொல்லப்பட்டதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. 

இந்த சம்பவத்தால் கோபம் அடைந்த அப்பகுதி மக்கள் பாதுகாப்பு படையினரை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்த முயற்சித்ததாக தெரிகிறது. இதனால், தற்பாதுகாப்புக்காகவும் பாதுகாப்பு படையினர் சுட்டதாக சில உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.  இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நாகலாந்து முதல் மந்திரி நைபியு ரியோ, மக்கள் அமைதி காக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 

தற்போது அங்கு நிலமை கட்டுக்குள் உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ராணுவமும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.  இந்த சம்பவத்தை கேள்வி பட்டு வேதனை அடைந்ததாக குறிப்பிட்டுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மாநில அரசு  உயர் மட்ட அளவிலான சிறப்பு விசாரணைக்குழு அமைத்து விரிவான விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வழி செய்யும் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

மியான்மர் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள மோன் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட அமைப்பான  நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில்NSCN (K) பிரிவினர் ஆதிக்கம் உள்ளது. மியான்மர், இந்தியாவில் உள்ள நாகா இனமக்கள் வசிக்கும் பகுதிகளை ஒருங்கிணைத்து அகன்ற நாகாலாந்து (நாகாலிம்) என்ற தனிநாட்டை உருவாக்க என்.எஸ்.சி.என் எனப்படும் நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் என்ற அமைப்பு ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றது. எனவே, இந்த அமைப்பினருக்கு எதிரான நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் நாகலாந்தில் ஈடுபட்டுள்ளனர். 

Next Story