இந்தியாவில் ஒமைக்ரான் அலை ஏற்படுமா? 6-8 வாரத்தில் தெரியும் என நிபுணர்கள் கருத்து


இந்தியாவில் ஒமைக்ரான் அலை ஏற்படுமா? 6-8 வாரத்தில் தெரியும் என நிபுணர்கள்  கருத்து
x
தினத்தந்தி 5 Dec 2021 3:59 PM IST (Updated: 5 Dec 2021 3:59 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் ஒமைக்ரான் பரவலால் கொரோனாவின் அடுத்த அலை ஏற்படுமா? என்பது குறித்து தெளிவாக தெரியவர இன்னும் இரண்டு மாதங்கள் வரை ஆகலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மும்பை,

உருமாறிய புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான், தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலாக கடந்த 24-ந் தேதி கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் 10 நாட்களில் 38-க்கும் மேற்பட்ட நாடுகளில் கால் பதித்து உலகை அதிர வைத்து வருகிறது.  

ஒமைக்ரான் வைரஸ் தோன்றியுள்ள தகவல் வெளியானதும் இந்தியா உஷாரானது. இந்த தொற்றை தடுப்பதற்காக அனைத்து விமான நிலையங்களிலும் வெளிநாட்டுப்பயணிகள் வந்திறங்குவதை தீவிரமாக கண்காணித்து வருகிறது. எனினும்,  இந்தியாவையும் இந்த வைரஸ் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் தற்போதய நிலவரப்படி 5 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், இந்தியாவில் ஒமைக்ரான்  பரவலால் கொரோனாவின் அடுத்த அலை ஏற்படுமா? என்பது குறித்து தெளிவாக தெரியவர இன்னும் இரண்டு மாதங்கள் வரை ஆகலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.  இது குறித்து மராட்டிய அரசின் கூடுதல் தலைமை செயலாளர் (சுகாதாரம்) மருத்துவர் பிரதீப் வையாஸ் கூறுகையில், “  கொரோனா தடுப்பூசி அனைவருக்கும்  விரைவாக செலுத்தி முடிப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.  மாஸ்க் அணிவது உள்பட  பொதுமக்கள் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றுவதையும் உறுதி செய்தல் வேண்டும்” என்றார். 

மராட்டிய அரசின் கொரோனா தடுப்பு பணிக்குழுவில் இடம் பெற்றுள்ள டாக்டர் ஷஷாங்க் ஜோஷி கூறும் போது, “ ஒமைக்ரான் வைரஸ் தற்போதைக்கு புரியாத புதிராக உள்ளது. நாம் அச்சம் அடைய வேண்டியது இல்லை. விழிப்புடன் இருக்க வேண்டும். டெல்டா வகையை மீறி ஒமைக்ரான் பரவுகிறதா? என்பதை அடுத்த சில வாரங்களில்  நாம் ஆய்வு செய்ய வேண்டும். இந்தியாவில் ஒமைக்ரான் எவ்வாறு செயல்படுகிறது என்பதை கண்டறிய  அடுத்த 6 முதல் 8 வாரங்கள் மிக முக்கியமானவை” என்றார். 

Next Story