மராட்டியத்தில் கூடுதலாக 2 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு; இந்தியாவில் 23 ஆக உயர்வு
மராட்டியத்தில் கூடுதலாக 2 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 10 ஆக உயர்ந்து உள்ளது.
புனே,
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்த சூழலில், உருமாறிய புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான், தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலாக கடந்த 24-ந் தேதி கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் 10 நாட்களில் 38-க்கும் மேற்பட்ட நாடுகளில் தடம் பதித்து உலகை அதிர வைத்து வருகிறது.
ஒமைக்ரான் வைரஸ் தோன்றியுள்ள தகவல் வெளியானதும் இந்தியா எச்சரிக்கை அடைந்தது. இந்த தொற்றை தடுப்பதற்காக அனைத்து விமான நிலையங்களிலும் வெளிநாட்டு பயணிகள் வந்திறங்குவது தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனினும், இந்தியாவையும் ஒமைக்ரான் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் நேற்று காலை வரை 5 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது.
அவர்களில் கர்நாடகாவில் இருவருக்கும், குஜராத், டெல்லி மற்றும் மராட்டியத்தில் தலா ஒருவருக்கும் என மொத்தம் 5 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், நேற்று மராட்டியத்தில் கூடுதலாக 7 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், மராட்டியத்தில் மொத்தம் 8 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது.
இதன்பின்னர், ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் நகரில் 9 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்தது.
ராஜஸ்தானில் ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்ட 9 பேரில் 4 பேர் ஒரே குடும்ப உறுப்பினர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், மராட்டியத்தில் கூடுதலாக 2 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்த 37 வயதுடைய நபர் மற்றும் அவருடைய நண்பரான, அமெரிக்காவில் இருந்து திரும்பிய 36 வயதுடைய நபர் என இரண்டு பேருக்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டு உள்ளன. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10 ஆக உயர்வடைந்து உள்ளது. இதேபோன்று, நாட்டில் மொத்த ஒமைக்ரான் பாதிப்பு 23 ஆக உயர்வடைந்து உள்ளது.
Related Tags :
Next Story