அடுத்த முப்படைத் தலைமை தளபதி யார்? பாதுகாப்பு அமைச்சகம் பரிசீலனை


அடுத்த முப்படைத் தலைமை தளபதி யார்? பாதுகாப்பு அமைச்சகம் பரிசீலனை
x
தினத்தந்தி 9 Dec 2021 4:05 AM GMT (Updated: 9 Dec 2021 4:05 AM GMT)

அடுத்த முப்படைத் தலைமை தளபதி யார்? என்பது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுடெல்லி,

நீலகிரி மாவட்டம் குன்னூர் நஞ்சப்பா சத்திரம் பகுதியில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் கோர விபத்தில், முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இவர்களின் உடல் ராணுவ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

ராணுவ உயர்அதிகாரிகள் மற்றும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காலை 10 மணியளவில் அஞ்சலி செலுத்த உள்ளனர். இந்த பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அஞ்சலி செலுத்திய பிறகு சாலை மார்க்கமாக உடல்கள் கோவை சூலூர் விமான நிலையம் கொண்டுசெல்லப்பட உள்ளது.

அந்த நேரத்தில் பாவியார் சாலை முழுவதும் வாகன போக்குவரத்து தடை செய்யப்படும். அதே நேரத்தில் நஞ்சப்பா சத்திரம் பகுதி முழுவதும் ராணுவ கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. டி.ஜி.பி சைலேந்திரபாபு ஆய்வு செய்தார்.

வெலிங்டனில் அஞ்சலி செலுத்தப்பட்டு பின்னர் உடல்கள் கோவை கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இதற்கிடையில், ஹெலிகாப்டர் விபத்தில் கருப்பு பெட்டியில் இருந்த டிரான்ஸ்பார்மர் பழுதடைந்ததால் சிக்னல் கிடைக்கவில்லை. விமான விபத்து நடந்த இடத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் தேட நிபுணர்கள் குழு முடிவு செய்தது. ஏற்கனவே 200 மீட்டர் சுற்றளவில் தேடப்பட்டு வந்த நிலையில் கருப்பு பெட்டி நேற்று இரவு எடுத்துச்செல்லப்பட்டது. கண்டெடுக்கப்பட்ட கருப்புப்பெட்டி குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தநிலையில்,  ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத் உயிரிழந்ததையடுத்து முப்படைத்தலைமை தளபதி பதவிக்கு ராணுவ தளபதி மனோஜ் நரவானேயை நியமிக்க பாதுகாப்பு அமைச்சகம் பரிசிலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Next Story