மது வாங்கி தர மறுத்த மகன்... சுத்தியலால் அடித்தே கொன்ற தாயார்


மது வாங்கி தர மறுத்த மகன்... சுத்தியலால் அடித்தே கொன்ற தாயார்
x
தினத்தந்தி 9 Dec 2021 6:04 PM IST (Updated: 9 Dec 2021 6:04 PM IST)
t-max-icont-min-icon

மது வாங்கி தர மறுத்த மகனை தலையில் சுத்தியலால் தாக்கி கொன்ற தாயை போலீசார் கைது செய்தனர். மகன் காணாமல் போனதாக அவர் நாடகமாடியது அம்பலமானது.

மும்பை,

மும்பை செம்பூர் வாஷிநாக்கா பகுதியை சேர்ந்த பெண் லூர்துமேரி (வயது52). இவரது மகன் பிரவின் உடன் வசித்து வந்தார். கடந்த 4-ந்தேதி பிரவினிடம் கடைக்கு சென்று மதுபானம் வாங்கி வரும்படி கேட்டார். இதற்கு மகன் பிரவின் மறுத்ததால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் பிரவின் தாயை தாக்கியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த தாய் லூர்துமேரி அங்கிருந்த சுத்தியலை எடுத்து, மகன் பிரவினின் தலையில் சரமாரியாக தாக்கினார். இதனால் பிரவின் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.

பின்னர் தாய் லூர்துமேரி படுகாயமடைந்து கிடந்த மகனை கண்டுகொள்ளாமல் வீட்டை பூட்டி விட்டு மான்கூர்டில் வசிக்கும் உறவினர் வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். பிரவினை தேடி வந்த நண்பர்களிடம் காணாமல் போனதாக தெரிவித்து உள்ளார். மான்கூர்டு சென்ற போது அங்கிருந்த கணவரிடமும் மகன் காணாமல் போனதாக தெரிவித்தார். ஆனால் கணவர் மனைவியின் பேச்சை நம்பவில்லை.

அவரது பேச்சில் சந்தேகம் ஏற்பட்டதால் 2 நாட்கள் கழித்து கடந்த 6-ந் தேதி லூர்துமேரியை அழைத்து கொண்டு கணவர் வீட்டிற்கு சென்றார். அங்கு மகன் பிரவின் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி கணவர் ஆர்.சி.எப். போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் படி போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் தாய் லூர்து மேரி பெற்ற மகனை சுத்தியலால் தாக்கி கொன்று விட்டு நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து கொலை வழக்காக பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Next Story