ஆட்டம் பாட்டத்துடன் போராட்டக்களத்தில் இருந்து விடைபெற்ற விவசாயிகள்...!
டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஓராண்டுக்கும் மேலாக போராடி வந்த விவசாயிகள் வீடு திரும்பி வருகின்றனர்.
புதுடெல்லி,
வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, டெல்லி எல்லை பகுதிகளை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த ஆண்டு நவம்பர் 26-ந் தேதி தொடங்கிய போராட்டம், ஓராண்டை கடந்தும் நீடித்தது.
வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். நாடாளுமன்றத்தில் முறைப்படி சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டன.
இருப்பினும், விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் வேண்டும், விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று விவசாயிகள் நிபந்தனை விதித்தனர். அவற்றை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதால், போராட்டத்தை வாபஸ் வாங்குவதாக நேற்று முன்தினம் அறிவித்தனர்.
இந்தநிலையில், டெல்லியை ஒட்டிய சிங்கு, திக்ரி, காசிப்பூர் ஆகிய எல்லைகளில் ஓராண்டுக்கு மேல் முகாமிட்டிருந்த விவசாயிகள் வீடு திரும்புவதற்கான ஆயத்த பணிகளில் நேற்று ஈடுபட்டனர்.
இதற்காக தங்கள் கூடாரங்களை அகற்றினர். ஒருவருக்கொருவர் உதவி செய்ய கூடாரங்களை பிரித்தனர். தார்ப்பாய், ஏணி, கம்புகள், கயிறுகள், படுக்கை விரிப்புகள், கம்பி வேலிகள், கொசு வலைகள், பி.வி.சி. ஷீட்கள் ஆகியவற்றை வாரி சுருட்டி வாகனங்களில் ஏற்றினர். வாஷிங் மெஷின், உடற்பயிற்சி கருவிகள் போன்றவற்றையும் ஏற்றினர்.
கூடாரம் அமைக்கும்போது நிறைய நேரம் இருந்ததால், பொறுமையாக அமைத்ததாகவும், தற்போது அவசர அவசரமாக பிரிக்க வேண்டி இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.
இளைஞர்கள், டிராக்டர்கள் சரியாக இயங்குகிறதா என்று சரி பார்த்தனர். டிராக்டருடன் கூடிய டிராலிகளை சுத்தம் செய்தனர்.
பெண் விவசாயிகள், சமையல் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இன்று காலை டிபன் செய்து அனைவரும் ஒருவொருக்கொருவர் பறிமாறிக்கொண்டனர்.
போராட்டக் களத்தில் அமைக்கப்பட்ட கூடாரங்கள் அகற்றப்பட்டதையடுத்து ஆட்டம் பாட்டத்துடன் போராட்டக்களத்தில் இருந்து விவசாயிகள் விடைபெறுகின்றனர். விவசாயிகள் அவரவர் வீடுகளுக்கு புறப்பட்டு சென்ற வண்ணம் உள்ளனர்.
Related Tags :
Next Story