பண்டைய இந்தியாவில் தேர்தல் நடத்தப்பட்டதற்கு உத்திரமேரூர் கல்வெட்டுகளே சாட்சி: மோடி


பண்டைய இந்தியாவில் தேர்தல் நடத்தப்பட்டதற்கு உத்திரமேரூர் கல்வெட்டுகளே சாட்சி: மோடி
x
தினத்தந்தி 11 Dec 2021 5:04 PM GMT (Updated: 2021-12-11T22:34:26+05:30)

பண்டைய இந்தியாவில் தேர்தல் நடத்தப்பட்டதற்கு உத்திரமேரூர் கல்வெட்டுகளே சாட்சி என்று ஜோ பைடன் நடத்திய மாநாட்டில் மோடி பேசினார்.

பெரிய ஜனநாயக நாடு

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஜனநாயகத்துக்கான உச்சி மாநாட்டை நடத்தினார். அதில், பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டார்.

அதில் அவர் பேசியதாவது:-

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு சார்பில் இம்மாநாட்டில் பங்கேற்பதில் பெருமைப்படுகிறேன். எங்கள் நாகரிகத்திலேயே ஜனநாயக பண்பு இரண்டற கலந்துள்ளது. 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் லிச்சாவி, ஷாக்யா ஆகிய பண்டைய நாகரிகங்கள் செழித்து வளர்ந்தன.

ஜனநாயகம் நீடிக்கும்

அதே ஜனநாயக உணர்வு 10-ம் நூற்றாண்டிலும் நிலவியதை காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் கிடைத்த கல்வெட்டுகள் மூலம் அறியலாம். அவற்றில் தேர்தல் முறைகள் பற்றி கூறப்பட்டுள்ளது.

இந்த ஜனநாயக பண்புகள், பண்டைய இந்தியாவை வளமான நாடாக உருவாக்கின. காலனி ஆட்சியால், இந்த உணர்வை நசுக்க முடியவில்லை. அதே ஜனநாயக உணர்வு, சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் நீடித்து வருகிறது.

இந்தியாவின் கதை, உலகத்துக்கு சொல்வது என்னவென்றால், இங்கு ஜனநாயகம் நீடிக்கும் என்பதுதான்.

சுதந்திரமான தேர்தல்

ஜனநாயக நாடுகளிடையே ஒத்துழைப்பை பகிர்ந்து கொள்ள இம்மாநாடு வாய்ப்பாக அமையும். எனவே, சுதந்திரமான, நியாயமான தேர்தல் நடத்துவதில் தனது நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்வதில் இந்தியா மகிழ்ச்சி அடைகிறது.

சமூக வலைத்தளம், கிரிப்டோ கரன்சி போன்ற உருவாகி வரும் தொழில்நுட்பங்கள், ஜனநாயகத்துக்கு அதிகாரம் அளிக்க பயன்பட வேண்டும். அதை செயலிழக்க வைக்கக்கூடாது. அதற்காக நாம் உலகளாவிய விதிமுறைகளை கூட்டாக வகுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story